புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோவிலில் நிதி முறைகேடுகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. பக்தர்கள் கோவிலுக்கு வழங்கிய நன்கொடை, குறிப்பாக தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்டவை முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாகவும் இதன் மதிப்பு ரூ.200 கோடிக்கும் அதிகம் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் முறைகேடுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அஜய் குமார் ராய், தினேஷ் குமார் யாதவ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகர் சிங் உள்ளிட்டோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,‘‘ராமர் கோவில் கட்டுமானத்திற்காகப் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை நிதிகள் தவறான வழிகளில் திசைதிருப்பி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநில அரசு அமைத்துள்ள சிறப்பு புலன் விசாரணை குழு நடத்தி வந்தாலும், அவர்களிடம் இத்தகைய சிக்கலான நிதி மோசடிகளை விசாரிப்பதற்கான தடயவியல் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் கிடையாது.
மேலும், முறையான முதல் தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யப்படாமல் இந்த விசாரணை நடந்து வருவதால் விசாரணை மீதான நம்பகத்தன்மை கேள்வியாகி உள்ளது. மேலும், திருப்பதி லட்டு நெய் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆந்திர மாநில எஸ்.ஐ.டிக்கு பதிலாக சிபிஐ தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. அதேப்போன்று இந்த விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில் கோவில் கணக்கு புத்தகங்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் வங்கி பதிவுகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி சூர்யாகாந்த் அமர்வு,‘‘இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு, ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மற்றும் உத்தரப்பிரதேச அரசு ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்தனர். அதேப்போன்று இந்த விவகாரத்தில் உத்திரப்பிரதேச மாநில எஸ்.ஐ.டி குழு தங்களது விசாரணை நிலவரம் மற்றும் அந்த குழுவின் கட்டமைப்பு குறித்த முழுமையான அறிக்கையையும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
