ஓசூர், ஜூலை 13: ஓசூரில் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க பார்சல் சர்வீஸ் குடோன்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். ஓசூர் அருகே கர்நாடகா மாநில எல்லை வழியாக தமிழகத்திற்கு குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் கடத்தி வரப்படுகிறது. இதனை தடுக்க தமிழக மாநில எல்லையில் போலீசார் தீவீர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதனையும் மீறி போதை பொருட்கள் கடத்தல் தொடர்ந்து நடைப்பெற்று வருவதால், கடந்த வாரம் ஓசூரில் பல்வேறு இடங்களில், வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த அறைகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும், கடத்தி வந்தவர்கள் மற்றும் விற்பனை செய்து வந்த சில வட மாநில தொழிலார்களை கைது செய்தனர்.
இதையடுத்து, நேற்று மாவட்ட எஸ்பி அனிதா உத்தரவின் பேரில், ஓசூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில், ஓசூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், அட்கோ போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் ஓசூரில் பல்வேறு இடங்கில் உள்ள பார்சல் சர்வீஸ் குடோன்களில் போலீசார், மோப்ப நாய் ஜாக்கி உதவியுடன் பார்சல்களை சோதனை செய்தனர். இதில் குறிப்பாக வட மாநிலத்திலிருந்து வந்துள்ள பார்சல்களை போலீசார் சோதனை செய்தனர். இது போன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.
