கிருஷ்ணகிரி, ஜூலை 13: சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற வருகிற 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து, கவுரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளை ஆண்டுதோறும் தேர்வு செய்து, சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகையும் வழங்கி, தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
இதனடிப்படையில், 2026ம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்பும் ஊராட்சிகள், இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்திலும் வேலை நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள https://cms.tn.gov.in/cmmigrated/document/forms/social award 26 27.pdf link அல்லது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உள்ள க்யூஆர் கோடு-ஐ ஸ்கேன் செய்தும் விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வருகிற 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
