தூத்துக்குடி: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக ஆத்தூர் போலீசாரால் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கோர்ட்டுக்கு அழைத்து செல்வதற்காக வெளியே வந்தபோது, அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கூறுகையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் சேருமாறு தன்னை வற்புறுத்துவதாக புகார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சிஎஸ்ஆர் பதிவு செய்து உள்ளனர். இதன் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து விசாரணைக்காக அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நேற்று மதியம் 2 மணிக்கு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு வந்தார். அங்கு எஸ்பி அபிஷேக்குப்தா தலைமையிலான போலீசார், அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம், 101 கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்த கேள்விகளுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அளித்த பதில்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. இந்த விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விசாரணையின் போது அளித்த பதில்கள் அடங்கிய விவரங்களை தர வேண்டும் என்று எம்எல்ஏ தரப்பு வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீசார், இதுகுறித்து உரிய தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
இதனால் விசாரணை அறிக்கையில், அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கையெழுத்திடாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கூறுகையில், என்னை கைது செய்து போலீஸ் எஸ்பி அலுவலகத்துக்கு கொண்டு வந்தபோது என்ன நடந்தது, எஸ்பி அலுவலகம் உள்ளே என்ன நடந்தது என்பது குறித்து உள்ளே தெரிவித்து விட்டேன். என்றார்.
