நெல்லை: நெல்லை அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை நேற்று அதிகாலை போலீசார் சுட்டுப்பிடித்தனர். இந்த சம்பவத்தில் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த பெருமாள்பாண்டியனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சித்திரபுத்திரன் குடும்பத்தினருக்கும் இடையே 2007ம் ஆண்டு பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த சுப்பிரமணியன், சுப்பையா, சின்னதம்பி, பெருமாள், பாபநாசம், குமார் மற்றும் பெருமாள்பாண்டியன் என 7 பேர் கொலை செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2ம் தேதி சித்திரைபுத்திரனின் மற்றொரு மகனான காளிமுத்து(40), அவரது மகன்கள் சின்னத்துரை (15), ஜெயராஜ் (5) ஆகியோர் வீரவநல்லூரை அடுத்த மாதுடையார்குளம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது எதிர்த்தரப்பினரால் காரால் மோதி காளிமுத்து, ஜெயராஜ் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
படுகாயம் அடைந்த சின்னத்துரை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், மூலச்சியைச் சேர்ந்த 13 பேரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஏற்கனவே கொலையுண்ட சுப்பையா மகன் கிருஷ்ணன் (எ) அஜித் (28) நேற்று அதிகாலை தெற்கு வீரவநல்லூர் 80 அடி கால்வாய் பகுதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து எஸ்.ஐ சினேகாந்த் தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணனை பிடிக்க முயன்றனர். அப்போது கிருஷ்ணன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்ட பாய்ந்துள்ளார். இதில் காவலர் பரமசிவம் என்பவருக்கு இடது கையில் வெட்டு விழுந்தது. இதனையடுத்து தற்காப்புக்காகவும், குற்றவாளியைக் கட்டுப்படுத்தவும் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கிருஷ்ணன் காலில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து காயமடைந்த கிருஷ்ணன், காவலர் பரமசிவன் ஆகியோரை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
