மும்பை: ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்ற நடிகர் கோவிந்தாவின் மனைவி சுனிதா அகுஜா, தனது கணவர் மற்றும் திருமண உறவு குறித்து வெளிப்படையான கருத்துகளைப் பகிர்ந்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல டிவி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற நடிகர் கோவிந்தாவின் மனைவி சுனிதா அகுஜா (50), அங்கு வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்த நடிகை ஷில்பா ஷிண்டேயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடிகர் கோவிந்தா குறித்து சுனிதா முன்பு தெரிவித்த கருத்துகளை ஷில்பா விமர்சித்ததே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்தது. இந்த விவாதத்தின் போது தனது கணவர் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை சுனிதா வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து சுனிதா அகுஜா ஆவேசமாக கூறுகையில், ‘அவர் எனது கணவர். அவருக்கு 10 பெண்களுடன் பாலியல் உறவு இருந்தாலும் அவரை விட்டு நான் பிரிய மாட்டேன். எனது கடைசி மூச்சு வரை நான் அவரை நேசிப்பேன். அவருக்கு 50 பெண்களிடம் உறவுகள் இருந்தாலும் உங்களுக்கு என்ன பிரச்னை? என்னை விமர்சிப்பதற்கு முன்பு மக்கள் என் இடத்தில் இருந்து சிந்தித்து பார்க்க வேண்டும். இதுபோன்ற சூழலை நீங்கள் சந்திக்கும் போதுதான் நான் என்ன உணர்கிறேன் என்பது உங்களுக்கு புரியும். இது எனது வாழ்க்கை, எனக்கு விருப்பமானதை நான் செய்வேன்’ என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஒரு மராத்தி நடிகையுடன் கோவிந்தாவிற்கு தொடர்பு இருப்பதாகத் தான் கேள்விப்பட்டதாகவும், ஆனால் நேரில் பார்த்தால் மட்டுமே அதை நம்புவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். சுனிதாவின் இந்தப் புதிய கருத்து சமூக வலைதளங்களில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு எனப் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
