புறநகர் பகுதியில் விவசாயிகள் பயன்படுத்திய களம் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு: மீட்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

 

புழல்: சென்னை புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் களம் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளான புழல், புத்தகரம், சூரப்பட்டு, கதிர்வேடு, வடபெரும்பாக்கம், விளாங்காடுப்பாக்கம், வடகரை, புள்ளி லைன், சென்றம்பாக்கம், அழிஞ்சிவாக்கம், கிராண்ட் லைன், தீர்த்தங்கரையம்பட்டு, சோழவரம், பாடியநல்லூர், கும்மனூர், ஆத்தூர். அலமாதி. எருமை வெட்டி பாளையம், பூதூர், ஆங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் ஒருசில இடங்களில் இரண்டு போகமாகவும், மூன்று போகமாகவும் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வளர்ச்சி என்ற பேரில் விவசாயம் செய்து வந்த நிலங்கள் தற்போது பெரும்பாலான இடங்களில் வீட்டுமனைகளாக அமைக்கப்பட்டு, அதில் குடியிருப்புகள் மற்றும் குடோன்கள் கெமிக்கல் நிறுவனங்கள், கனராக வாகனம் மெக்கானிக் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தந்த கிராமங்களில் நிலத்தடி நீர் குறைந்து வருவதுடன் குடிநீரும் பாழடைந்து வருகிறது. இந்நிலையில், விவசாயம் செய்து அதில் விளையும் நெல்மணிகள் மற்றும் பச்சைப் பயிர்கள் உள்ளிட்ட தானியங்களை கொட்டி வைப்பதற்காக, பெரும்பாலான விவசாய நிலங்களுக்கிடையே அரசு களம் புறம்போக்கு இடம் அந்தந்த விவசாயப் பகுதிகளில் சுமார் ஒரு ஏக்கர் முதல் இரண்டு ஏக்கர் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதனால், அப்போது விவசாயம் செய்து வந்த விவசாயிகள் இந்த இடத்தில் நெல்மணிகள், பச்சைப் பயிர்கள் உள்ளிட்டவற்றைக் கொட்டி வைத்து பதப்படுத்தி விவசாயம் செய்து வந்தனர்.

ஆனால், இன்றைக்கு சமூக விரோதிகள் களம் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, களம் புறம்போக்கு என்ற இடம் இல்லாமல் உள்ள சூழ்நிலை பெரும்பாலான விவசாயப் பகுதிகளில் உள்ளது. இதில் குறிப்பாக, செங்குன்றம் அடுத்த புழல் ஒன்றியம் விளாங்காடுப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணம்பாளையம், விளாங்காடுப்பாக்கம், தர்காஸ், வடபெரும்பாக்கம், புள்ளி லைன், பாயாசம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த விவசாய நிலங்கள், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடங்களை விற்பனை செய்த நிலையில், அந்த இடங்களில் பெரும்பாலான இடங்களில் தனியார் நிறுவனத்தினர் கெமிக்கல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

அந்தப் பகுதிகளில் இருந்த, குறிப்பாக விளாங்காடுப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணம்பாளையம் கிராமத்தில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் இருந்த களம் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அந்த இடத்தில் சட்டவிரோதமாக மண்ணை எடுத்து கெமிக்கல் கழிவுப் பொருட்களை கொட்டி வருகின்றனர். இதனால், அந்தப் பகுதியில் கெமிக்கல் நிலத்தடியில் இறங்கி குடிநீர் மாசுபடும் நிலை உள்ளது. இதேபோல், அருகில் உள்ள சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள களம் புறம்போக்கும் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஏற்கனவே விளாங்காடுப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு புறம்போக்கு இடங்கள் 150 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அதற்கு பட்டாவும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சமூக ஆர்வலர் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

எனவே, இது குறித்து பல்வேறு புகார்களை அந்தந்த பகுதி சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வருவாய்த் துறையினர் புறக்கணித்து வருகின்றனர். இதேநிலை நீடித்தால், வருங்காலத்தில் அரசு களம் புறம்போக்கு நிலம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விடும். எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட வருவாய்த் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, எங்கெங்கு விவசாய நிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட களம் புறம்போக்கு நிலங்கள் உள்ளன என்பதை கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் அரசு சார்பில் சமுதாயக் கூடங்கள், பூங்காக்கள் அமைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாயம் செய்து அதில் விளையும் நெல்மணிகள் மற்றும் பச்சைப் பயிர்கள் உள்ளிட்ட தானியங்களை கொட்டி வைப்பதற்காக, பெரும்பாலான விவசாய நிலங்களுக்கிடையே அரசு களம் புறம்போக்கு இடம் அந்தந்த விவசாயப் பகுதிகளில் சுமார் ஒரு ஏக்கர் முதல் இரண்டு ஏக்கர் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

Related Stories: