சிவகிரி, ஜூலை 8: சிவகிரி தேசிய நெடுஞ்சாலையில் அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் அதிவேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கவும், வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுபடுத்தவும் பேரிக்கார்டு வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகிரி தாலுகா அலுவலகம் அருகே உயர்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளாகம், சார்நிலை கருவூலம், உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தாலுகா அலுவலகத்திற்கும், மருத்துவமனைகளுக்கும் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
அரசு அலுவலகங்கள் நிறைந்த இப்பகுதியில் பேரிக்கார்டு இல்லாததால் அதிவேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்றன. தற்போது குற்றால சீசன் என்பதால் இவ்வழியாக வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே இடத்தில் நடைபெற்ற விபத்தில் பலர் காயமடைந்தனர். எனவே வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுபடுத்தும் வகையில் இப்பகுதியில் பேரிக்கார்டு வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
