விளாத்திகுளம் யூனியன் ஆபீசை விவசாய தொழிலாளர்கள் முற்றுகை

 

விளாத்திகுளம், ஜூலை 8: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். புதிய விபி ஜி ராம்ஜி திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு வாபஸ் பெற வேண்டும். பழைய மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கிராம 100 நாள் வேலை தொழிலாளர்களின் கருவிழி பதிவை கைவிட வேண்டும். 100 நாள் வேலையை உடனடியாக முழுமையாக நிபந்தனையின்றி வழங்க வேண்டும். லெக்கம்பட்டி, வீரபாண்டிபுரம் ஊராட்சிகளில் 100 நாள் வேலையை வழங்க வேண்டும். மேல்மாந்தை ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக 100 நாள் வேலையை வழங்க வேண்டும்.

சுந்தரேசபுரம் ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலை முறைகேட்டை தடுத்து நிறுத்த வேண்டும். நாராயணபுரம் கிராமத்தின் காலனி பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதியை உடனடியாக செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் செல்வி தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய செயலாளர் முத்துமல்லம்மாள், விவசாய சங்க ஒன்றிய தலைவர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் மலைக்கனி, விவசாய தொழிலாளர் சங்க துணை செயலாளர் ஜெயலட்சுமி உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் விளாத்திகுளம் பிடிஓ தினகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இதையேற்று போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: