சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களைப் பாதிக்கும் வகையில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்-2013ல் ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் நேற்று கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை கடந்த ஜூன் 24ம் தேதி வெளியிட்ட 2026ம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்பு (திருத்த) சட்ட வரைவின் காரணமாக, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரதமர் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இச்சட்ட வரைவு, 2013ம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3ன்கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் மூலமாக தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருள் உரிமைகளை மாற்றுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய நடைமுறையின்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், ஒரு குடும்பத்திற்கு மாதமொன்றிற்கு 35 கிலோ கிராம் உணவு தானியங்கள் வழங்கப்படுவதாகவும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின்படி, ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக மொத்தம் 35 கிலோ கிராம் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு, நபர் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 7 கிலோ கிராம் உணவு தானியங்கள் வழங்கப்படவுள்ளது.
பல்வேறு உள்-வகைப்பாடுகளுக்கிடையே நிலவும் சமத்துவமின்மையைக் களைவதும், ஊட்டச்சத்து தேவைகளுக்கேற்ப உணவுப் பொருள் உரிமைகளை மிகச் சரியாக ஒழுங்குபடுத்துவதுமே இத்திருத்தத்தின் நோக்கம் என்று ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 3.54 ஆக மட்டுமே இருப்பதால், இத்திருத்தம், மாநிலத்தின் மிக ஏழ்மையான குடும்பங்களுக்குச் சென்றடையும் உணவு தானியங்களின் அளவை கணிசமாகக் குறைக்கும்.
தமிழ்நாட்டில் தற்போது 18,64,600 அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதன்மூலம் 69,26,983 ஏழை பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்காக அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற 65,261 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் மாதந்தோறும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
இந்த ஒட்டுமொத்த அளவும் ஒன்றிய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது, தற்போது முன்மொழியப்பட்டுள்ள இத்திருத்தம் நடைமுறைக்குவரும் நேர்வில், ஒரு நபருக்கு 7 கிலோ கிராம் என்ற விதிமுறையின்கீழ் கணக்கிடப்பட்டு, ஒன்றிய அரசின் மூலமாக வழங்கப்படுகிற, இந்த விநியோக அளவு சுமார் 42,040 மெட்ரிக் டன்னாகக் குறைந்துவிடும். இது சமூகத்தின் சுமார் எழுபது லட்சம் ஏழை, நலிவடைந்த மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும்.
தமிழ்நாட்டில் 5 உறுப்பினர்களுக்கும் குறைவான குடும்ப அளவைக் கொண்ட ஏஏஓய் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 15.75 லட்சமாகவும், 58.51 லட்சம் மக்கள் தொகையையும் கொண்ட தமிழ்நாடு மட்டுமல்லாது, அத்தகைய பிற மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படையும். எனவே, ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள இத்திருத்தம் எவ்வித மாற்றமுமின்றி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டால், மிகவும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த சுமார் எழுபது லட்சம் குடிமக்களின் உணவு பாதுகாப்பு சீர்குலையக் கூடுமென்பதால், 2013ம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3, உட்பிரிவு (1)-ன் முதலாவது வரம்பு நிபந்தனைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இச்சட்டம் இயற்றப்பட்ட நாள் முதல் நடைமுறையில் இருப்பது போல, அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், தற்போதைய நடைமுறையான மாதத்திற்கு முப்பத்தைந்து கிலோ கிராம் உணவு தானியங்கள் வழங்கும் உரிமையைத் தொடர வேண்டும். எனவே, சுமார் எழுபது லட்சம் ஏழைக் குடிமக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் தமிழ்நாட்டின் எண்ணங்கள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு தமிழ்நாட்டின் நலனுக்குகந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
