சென்னை: பாஜவுக்கு போட்டியாக சின்ன வாஷிங் மெஷினாக தவெக வந்துள்ளது என்றும், திமுகவை யாராலும், எந்த கொம்பனாலும் தொட முடியாது என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஜூன் மாதம் முழுவதும் மாவட்டத்தில் சுமார் 256 நிகழ்ச்சிகள் நடத்தி, புத்தெழுச்சி நாளை புத்துணர்ச்சியுடன் கொண்டாடிய திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடந்தது.
இதில், திமுக இளைஞரணி செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திமுக நிர்வாகிகள் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தலுக்கு பிறகு என்னென்ன கூத்து நடக்கிறது என்று அன்றாடம் நாம் செய்திகளில் பார்க்க முடிகிறது. அதிமுகவை உடைத்துவிட்டார்கள். ஆனால் திமுகவை தொட முடிந்ததா? யாராலேயும், எந்த கொம்பனாலும் தொட நினைத்துக்கூட பார்க்க முடியாது. திமுகவை சீண்டி பார்க்க முடியவில்லையே என்று நினைத்து தான் தினமும் நம் மீது அவதூறு பரப்புகிறார்கள்.
இந்த ஆட்சியில் இதுவரை மக்களுக்கான எந்த திட்டத்தையாவது கொடுத்திருக்கிறார்களா? எங்கே பார்த்தாலும் கரன்ட் கட். திரும்பும் இடமெல்லாம் பாலியல் வன்கொடுமை. ஆளுங்கட்சியினரே குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். தவெக அமைச்சர், கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது போதை பொருள் பயன்படுத்துகிறார். கேட்டால் குழந்தைக்கு மாத்திரை என சொல்கிறார். அந்த அமைச்சர் மீது இந்த அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா?.
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் கூட லஞ்சம் பெற்றதாக ஊழல் புகார். அதுவும் நாம் சொல்லவில்லை. தவெக கட்சியில் உள்ள வழக்கறிஞரே கூறுகிறார். சட்டமன்றத்தில் எதிரே பார்த்தால், திருட்டு விசிடி விற்றவர், பிளாக்கில் டிக்கெட் விற்றவர், பிளாக்கில் லாட்டரி விற்றவர் எல்லாம் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பெயரை குறிப்பிட தேவையில்லை. அவர்கள் யாரென்று மக்களுக்கே தெரியும். குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தான் இன்று அமைச்சர்களாக இருக்கிறார்கள்.
இவர்கள் யாரென்று முதல்வருக்கும் தெரியவில்லை, மக்களுக்கும் தெரியவில்லை, எங்களுக்கும் தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அழைத்து கைது செய்து, அவருக்கு சோபா தருவதாக கூறியுள்ளார்கள். ஆனால் அவர் ‘‘எனக்கு சோபா எல்லாம் வேண்டாம்’’ என்று சொல்லி விட்டார். கவுண்டமணி, செந்தில் இளநீர் நகைச்சுவை போன்று தவெக அரசு செய்து கொண்டிருக்கிறது. சட்டப்பேரவையில் முதல்வர் ‘‘விடமாட்டேன்… தொட மாட்டேன்..’’ என்றெல்லாம் பேசினார்.
அதற்கு அர்த்தம் இப்போது தான் புரிகிறது. அவர் ஊழல் வழக்கில் உள்ள அதிமுகவினரை ஒருவரையும் தொடவிட மாட்டேன். நானே இழுத்துக் கொண்டு வந்து விடுவேன் என்ற அர்த்தத்திலே அவர் கூறியுள்ளார். பாஜவின் மிகப்பெரிய வாஷிங் மெஷினுக்கு போட்டியாக, சின்ன வாஷிங் மெஷினாக தவெக வந்துள்ளது. என்றும் களத்தில் நிற்போம். மீண்டும் நம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
* குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை உடைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ரீல்ஸ் அமைச்சருக்கு எச்சரிக்கை
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. இது மிகவும் உணர்வற்ற செயல்.
மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் கிளாஸ் எடுக்க வேண்டும். நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை, மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
