சென்னை: சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் தாம்பரம், கேம்ப் ரோடு, நெடுங்குன்றம், நல்லம்பாக்கம் வழியாக கீரப்பாக்கம், குமிழி வரை தினந்தோறும் பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள பெரிய ஏரிக்கும், பழமை வாய்ந்த செல்லியம்மன் கோயிலுக்கும் இடையே கட்டாந்தரையாக உள்ள விவசாய நிலத்தில் நேற்று காலை 9 மணியளவில் வழக்கம்போல் ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சி செய்து கொண்டிருந்தது.
அப்போது, இயந்திர கோளாறு காரணமாக அவசர அவசரமாக விவசாய நிலத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. இதுகுறித்து பைலட்டுகள் தாம்பரம் ஏர்போர்ஸில் உள்ள அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை சரி செய்து மீட்டு செல்வதற்காக மூன்று ஹெலிகாப்டர்கள் வானத்தில் வட்டமிட்டபடி ஒரு மணி நேரமாக சுற்றின. இதையடுத்து 10 மணியளவில் ஒன்றன்பின் ஒன்றாக ஹெலிகாப்டர்கள் தரையிறங்கின.
இதில் இரண்டு பெண் பைலட்டுகள் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கி இயந்திர கோளாறை சரி செய்வதற்கான தளவாட சாமான்களை இறக்கிவிட்டு சென்றன. தொடர்ந்து, ஹெலிகாப்டரில் இயந்திர கோளாறை சரி செய்யும் பணி 2 மணி நேரமாக நடந்தது. பின்னர் பகல் 12 மணியளவில் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு அந்த ஹெலிகாப்டரை தாம்பரத்தில் உள்ள விமானப்படைக்கு பைலட்டுகள் பத்திரமாக எடுத்து சென்றனர்.
ஹெலிகாப்டர் திடீரென விவசாய நிலத்தில் இறங்கியதை கேள்விப்பட்டதும் ஹெலிகாப்டரை காண மக்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். அதே நேரத்தில் கீரப்பாகத்தில் காலியாக உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களை ராணுவ தளத்திற்கு கைப்பற்றுவதற்காக ஹெலிகாப்டர்கள் வந்து இறங்கின என்ற தகவல் வேகமாக பரவியதால் கீரப்பாக்கம் ஊராட்சியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேடிக்கை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தினர்.
இயந்திர கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்கியதை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில், ‘‘தாம்பரத்தில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் நெடுங்குன்றம் ஊராட்சியை சுற்றிதான் பயிற்சி எடுத்து வந்தன. ஆனால் சமீப காலமாக கீரப்பாக்கம் மற்றும் குமிழி வரை வந்து பயிற்சி செய்கின்றனர். கீரப்பாக்கம் ஊராட்சியை சுற்றி 12க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், இதேபோல் முருகமங்களம் மற்றும் கீரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளன.
இங்கு பயிற்சி செய்யும் ஹெலிகாப்டர்கள் கல்குவாரிகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் வழியாக பயிற்சி செய்யும்போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டால் அவசர அவசரமாக தரையிறங்க முடியாது. இதனால் பெரும் விபத்துதான் ஏற்படும். இதில் தற்போது பயிற்சி செய்த ஹெலிகாப்டர் ஏரி அருகே வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே இப்பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் பயிற்சி செய்வதை ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும்’’ என்றனர்.
