நீட் கட்டணம் ரீபண்ட்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

சென்னை: கடந்த மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்ட புகார்களை தொடர்ந்து, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ஜூன் 21 அன்று மறு தேர்வு நடத்தியது தேசிய தேர்வு முகமை. இந்நிலையில், தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘இதுவரை 8,29,510 தேர்வர்கள் மட்டுமே தங்களின் வங்கி கணக்கு விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் திருத்தம் அல்லது புதுப்பித்தல் செய்துள்ளனர்.

இதனால், தகுதியுடைய பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இதனை செய்யாவிட்டால், தங்களின் கட்டணத் தொகையை திரும்பப் பெறும் வாய்ப்பை இழக்க நேரிடும். நீட் யுஜி 2026 கட்டண திரும்பப் பெறுதலுக்கான வங்கி விவரங்களை புதுப்பிப்பதற்கான இன்றே கடைசி நாள் (ஜூலை 7ம் தேதி இரவு 11.50 மணி வரை).

இதுவரை இந்த நடைமுறையை முடிக்காத தேர்வர்கள் உடனடியாக neet.nta.nic.in என்ற இணையதளத்தில் லாகின் செய்து, தங்களின் வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஜூலை 7ம் தேதி நள்ளிரவு அவகாசத்திற்குள் விவரங்களை புதுப்பிப்பவர்கள், அடுத்தகட்ட கட்டணத் திரும்பப் பெறும் சுழற்சியில் சேர்க்கப்படுவார்கள். இந்த காலக்கெடுவை தவறவிடும் தேர்வர்கள், தங்களின் கட்டணத் தொகையைப் பெறுவதில் தாமதத்தைச் சந்திக்க நேரிடலாம் அல்லது தொகையை முழுமையாக இழக்க நேரிடலாம்’’ என்று தெரிவித்து உள்ளது.

Related Stories: