சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த மார்ச் 27ம் தேதி ஹேப்பி ராஜ் என்ற படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் இசையமைப்பாளர் இளையராஜா நடிப்பில் முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்று இருந்த பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், தனது அனுமதியின்றி, உருமாற்றி தனது பாடலை பயன்படுத்தியுள்ளனர். எனவே, அந்த பாடலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். படத்திலிருந்து பாடலை நீக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் ஏ.சரவணன் ஆஜராகி, இளையராஜா அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல் படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
பாடலை உருமாற்றி உள்ளதால் பாடலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஹேப்பி ராஜ் படத்தில் பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடலை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டதுடன் இதுகுறித்து படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
