செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே உதயம்பாக்கம் பாலாற்றில் சேதமான தரைப்பாலத்தை அகற்றிவிட்டு தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் கட்டித்தர வேண்டும் எனகரும்பு விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், உதயம்பாக்கம் – படாளம் இடையே உள்ள பாலாற்றில் கடந்த 2008ம் ஆண்டு தரைப்பாலம் கட்டப்பட்டு, இதில் ஒரு கிலோமீட்டர் தூரம் பணிகள் மட்டும் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இந்தப் பாலத்தை பொன்விளைந்த களத்தூர், ஒத்திவாக்கம், பூதூர் உள்ளிட்ட 50க்கும் அதிகமான கிராம பொதுக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில், பாலாறு குறுக்கே உள்ள உதயம்பாக்கம்-படாளம் இடையே கடந்த 2010ம் ஆண்டு பெரு வெள்ளத்தில் இந்த தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், மானாமதி, திருப்போரூர் ஆகிய பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் கரும்பு உள்ளிட்ட காய்கள், பழ வகைகள், தானியங்களை சந்தைப்படுத்த விழுப்புரம்-திண்டிவனம் செஞ்சிக்கு உதயம்பாக்கம் – படாளம் இடையே இருந்த இந்த தரைபால வழியை பயன்படுத்தி சென்றனர். அதேபோல் செங்கல்பட்டு நகருக்கு வருவதற்கும் இந்த சாலை பயன்பட்ட நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இந்த பாலம் கடந்த 20 ஆண்டு காலமாக மீண்டும் புதுப்பிக்கப்படாமலும், புதிதாக பாலம் கட்டாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் தற்போது கரும்பு விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் வெட்டப்படும் கரும்புகள் செங்கல்பட்டு, படாளம் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்ல 25 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதாலும், போக்குவரத்துக்கு வசதி இல்லாத காரணத்தாலும் கரும்பு விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர்.
இதேபோல் செங்கல்பட்டு அருகே உள்ள பாலாறு மேம்பால பகுதியில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இந்த தரைப்பாலத்தை பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அதிமுக ஆட்சியில் இதுகுறித்து விவசாயிகளிடம், பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு அதற்கான திட்டங்கள் வகுத்த நிலையில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் தமிழக அரசு உதயம்பாக்கம்-படாளம் இடையே தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைத்தால் மட்டுமே மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகளுக்கும், பொது போக்குவரத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
