நெல்லியாம்பதி சுற்றுலா தலத்திற்கு பயணிகளின் வாகனம் செல்ல பேரிடர் மீட்புக்குழு தடை

 

பாலக்காடு, ஜூலை 6: பாலக்காடு மாவட்டம் நெல்லியாம்பதி சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்ல பேரிடர் மீட்புக்குழு தடை விதித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் பல்வேறு இடங்களிலும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பல இடங்களிலும் மரங்கள் சாலைகளில் சாய்ந்து விழுந்துள்ளன. நெம்மாராவிலிருந்து போத்துண்டி அணை வழியாக நெல்லியாம்பதிக்கு செல்கின்ற மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. மேலும், பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு அபாய நிலை உள்ளன.

இதனை ஆய்வு செய்த பாலக்காடு மாவட்ட பேரிடர் மீட்புக்குழுவினர் இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நெல்லியாம்பதி சுற்றுலா தலத்திற்கு செல்வதற்குரிய அனுமதியை ரத்து செய்துள்ளது. இதனை மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டரும், மாவட்ட பேரிடர் மீட்புக்குழு தலைவருமான சுதீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளார். நெல்லியாம்பதி உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்கு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நெம்மாரா-போத்துண்டி-நெல்லியாம்பதி காட்டுவழி மலைப்பாதையில் கனமழை பெய்து வருவதால் வன விலங்குகளான காட்டு யானைகள், கரடி, சிறுத்தை, குரங்குகள், சிம்மவால் குரங்குகள், மான்கள், காட்டுமாடுகள் ஆகியவை சுதந்திரமாக சாலையில் நடமாடியபடி உள்ளன. கனமழை பெய்து வருவதால் நெல்லியாம்பதி சுற்றுலா தலங்கள் பசுமையாக உள்ளது.

Related Stories: