டிவைடரில் பைக் மோதி தஞ்சை வாலிபர் பலி

 

பாலக்காடு, ஜூன் 29: கேரளாவில் டிவைடரில் பைக் மோதி தஞ்சை வாலிபர் பலியானார். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் தமிழ்நாடு மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூர் ஆர்எம்எஸ் காலனி அன்னை சத்யா நகரை சேர்ந்த முத்துமணி மகன் மோகன்குமார் (21), இவரது நண்பர் கிரிஸ்டர் ஹாரிஸ் (24) ஆகியோரும் அங்கமாலி பகுதியில் நடந்த கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் அவர்கள் கட்டுமான பணி முடிந்ததும், அங்கமாலியிலிருந்து ஆலுவா நோக்கி பைக்கில் வந்துகொண்டிருந்தனர். பைக்கை கிரிஸ்டர் ஹாரிஸ் ஓட்டி வந்தார். மோகன்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். அங்கமாலி-ஆலுவா தேசிய சாலையில் அத்தாணி என்ற இடத்தில் வந்தபோது பைக் நிலைதடுமாறி ஓடி சாலையின் நடுவே இருந்த டிவைடரில் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

கீழே விழுந்த அவர்கள் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு அந்த வழியாக வந்த அமைச்சர் அப்துல் கபூரின் பைலட் வாகனத்தில் ஏற்றி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆலுவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: