பந்தலூர், ஜூலை 3: பந்தலூர் அருகே உப்பட்டி மேஸ்திரிகுன்னு பகுதியில் கட்டப்பட்டுள்ள மின் மயானம் விரைவில் திறக்கப்பட்ட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்த நகராட்சி 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை உள்ளடக்கியதாகும். நகராட்சியில் பல கிராமங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு மயானங்கள் உள்ளன. பல மயானங்கள் பராமரிப்பு இல்லாமல் முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் மழைக்காலங்களில் இறந்தவர்களை மயானங்களுக்கு சுமந்து சென்று அடக்கம் செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகிறது.
குறிப்பாக, இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு சாலை மற்றும் தண்ணீர், ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லாமல் உள்ளது. இறந்தவர்களை புதைப்பதற்கு குழி தோண்டுவதற்கு அதிக பணம் கேட்டு தொந்தரவு செய்வதும் நடக்கிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளால் இறந்தவர் குடும்பத்தினர் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே, நகராட்சி பகுதியில் மின் மயானம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நெல்லியாளம் நகராட்சி சார்பில் கடந்த திமுக ஆட்சியில் ரூ.2.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மின் மயானம் அமைக்க டெண்டர் விடப்பட்டது.
நகராட்சிக்குட்பட்ட உப்பட்டி மேஸ்திரி குன்னு பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலம் ஒதுக்கப்பட்டு மின் மயானம் கட்டும் பணிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. எனவே மின் மயான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைந்து மின் மயானத்தை திறந்து செயல்படுத்த வேண்டும் என்பது எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது. மக்களின் இந்த கோரிக்கைக்கு நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்பதை ெபாறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
