வால்பாறையில் உள்விளையாட்டு அரங்குகள் அமைக்க மக்கள் கோரிக்கை

 

வால்பாறை: வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், திறந்தவெளி விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் ஈரப்பதத்துடன் காணப்படுகின்றன. இதன் காரணமாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விளையாட முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி மைதானங்கள் மற்றும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் மழைநீர் தேங்கியுள்ளதுடன், புற்கள் மற்றும் களைகள் வேகமாக முளைத்து வளர்ந்து வருகின்றன. தொடர்ந்து மழை பெய்வதால் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், கபடி உள்ளிட்ட வெளிப்புற விளையாட்டுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

வால்பாறையில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை பல மாதங்கள் நீடிப்பதால், மழைக்காலங்களில் விளையாட்டு பயிற்சிகள் மற்றும் போட்டிகளை நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பல திறமையான இளைஞர்களின் விளையாட்டு ஆர்வம் குறையும் நிலை உருவாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து வால்பாறையில் பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் பிற விளையாட்டுகளுக்கான நவீன உள்விளையாட்டு (Indoor) அரங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோன்ற உள்விளையாட்டு வசதிகள் உருவாக்கப்பட்டால், பருவமழை காலங்களிலும் விளையாட்டு பயிற்சிகள் இடையூறு இன்றி நடைபெறுவதுடன், வால்பாறையைச் சேர்ந்த மாணவர்கள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு சிறப்பாக தயாராகும் வாய்ப்பும் உருவாகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: