சென்னை: தவெக பெண் நிர்வாகியை சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசியதாக கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட திமுக ஜென் ஸி பிரமுகர் ஆர்ஜே சரண் ஜெயராமனை (சரண்ராஜ்) நீதிமன்றக் காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. தவெக பெண் நிர்வாகிகளை சரண் ராஜ் அவதூறு செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பெண்களை ஆபாசமாகச் சித்தரித்தல், அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கொளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சரண் ராஜை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சரண்ராஜை விசாரணைக்குப் பிறகு, நீதிமன்ற காவலில் அடைப்பதற்காக எழும்பூர் நீதிமன்றத்திற்குப் போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் சென்னை பெருநகர 13வது மாஜிஸ்திரேட் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். சரண்ராஜ் தரப்பில் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட், காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். கைதுக்கான காரணத்தை குற்றம்சாட்டப்பட்டவருக்கு காவல்துறை முறையாக தெரிவிக்கவில்லை. ஒருவரை கைது செய்வதற்கான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் சட்ட விதிமுறைகள் எதையும் போலீசார் கடைபிடிக்கவில்லை.
எவ்வித சட்டபூர்வ நடைமுறைகளையும் மேற்கொள்ளாமல், அவசர அவசரமாக குற்றம்சாட்டப்பட்டவரை ரிமாண்ட் செய்ய வேண்டிய எந்தவொரு அவசியமும் இந்த வழக்கில் எழவில்லை என்று கூறி, சரண்ராஜை நீதிமன்ற காவலுக்கு அனுப்பக் கோரிய காவல்துறையினரின் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்து, அவரை உடனடியாக விடுவித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.
