இந்த வார விசேஷங்கள்

4.7.2026 – சனி திருத்தங்கல் சப்தாவரணம்

பெருந்திருவிழாவின் (பிரம்மோற்சவம்) இறுதிச் சடங்காக இந்த சப்தாவரணம் நடைபெறுகிறது.இறைவன் ஏழு சுற்றுக்கள் (பிராகாரங்கள்) வலம் வரும் நிகழ்வைக் குறிக்கும். அல்லது, விழாவின் நிறைவாக சுவாமி எழுந்தருளி, தங்களை இத்தனை நாட்கள் தரிசித்த பக்தர்களுக்கு விடை கொடுத்து, கருவறைக்குத் திரும்பும் சாந்தமான வழிபாடாகவும் இது அமையும். இதனை ‘‘விடையாற்றி உற்சவம்” என்றும் கூறுவர். திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழைமையான வைணவத் திருத்தலம். இத்திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில் பிரமோற்சவம் முடிந்து இன்று சப்தாவர்ணம் மற்றும் தீர்த்தவாரி.

4.7.2026 – சனி சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்

சுவாமி விவேகானந்தர் பாரதப் பண்பாட்டின், குறிப்பாக இந்து சமயத்தின் பெருமையை உலக அரங்கில் நிமிர்த்தி வைத்த மாபெரும் துறவி. இந்து சமயத்தின் தத்துவங்களை வெறும் சடங்குகளாகப் பார்க்காமல், அவற்றை மனிதநேயத்தோடும் சமூக சேவையோடும் இணைத்தவர். அவருடைய நினைவு நாளில் (ஜூலை 4), அவர் இந்து சமயத்தின் எழுச்சிக்காகவும், அதன் உலகளாவிய பரவலுக்காகவும் ஆற்றிய அரும்பணிகளையும், முக்கிய நிகழ்வுகளையும் நன்றியோடு நினைவுகூர்வோம்.
விவேகானந்தர் உபநிடதங்களின் தத்துவங்களை (வேதாந்தம்) காடுகளிலிருந்தும், மடங்களிலிருந்தும் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கைக்குக் கொண்டு வந்தார். இதற்கு ‘நடைமுறை வேதாந்தம்’ என்று பெயர்.ஏழைகளின் பசியைத் தீர்க்காத, அவர்களின் துயரத்தைத் துடைக்காத எந்த ஒரு மதத்தையும், இறை வனையும் நான் நம்பவில்லை” என்றார். பசியோடு இருப்பவனுக்கு மதம் தேவையில்லை, உணவுதான் தேவை என்பதை வலியுறுத்தினார். இறைவனைத் தேடி எங்கோ போக வேண்டாம்; பசியோடும் வறுமையோடும் இருக்கும் ஏழை மக்களின் சேவையே இறைவனுக்கான உண்மையான பூஜை (மானவ சேவையே மாதவ சேவை) என்றார்.

துறவிகள் தவம் செய்வதோடு நின்று விடாமல், பள்ளிகள், மருத்து வமனைகள், பேரிடர் நிவாரணப் பணிகள் ஆகியவற்றின் மூலம் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற விதியை உருவாக் கினார். இந்து சமயத்தின் தூய்மையான தத்துவங்களை ஏற்றுக் கொண்ட அதே வேளையில், சாதிப் பாகுபாடுகள், தீண்டாமை, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை வன்மையாகக் கண்டித்தார்.
கன்னியாகுமரி வரை இந்தியாவின் நாடி நரம்புகளைத் தொட்டு அறிந்தார். கன்னியாகுமரி கடல்பாறையில் மூன்று நாட்கள் தியானம் செய்து, பாரத தேசத்தின் எழுச்சிக்கான தன் வாழ் நாளின் கடமையைக் கண்டறிந்தார்.விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் தமது 39 ஆம் வயதில் மகாசமாதி அடைந்தார். அவர் நினைவுநாள் இன்று.

6.7.2026 – திங்கள்தேய்பிறை சஷ்டி

தேய்பிறை சஷ்டி முருகப் பெருமானுக்குரிய மிக விசேஷமான விரத தினங்களில் ஒன்றாகும். இந்நாளில் விரதமிருப்பது நம்முள்ளே இருக்கும் அகங்காரம், அறியாமை, மற்றும் தீய வினைகளை (கர்மாக்களை) படிப்படியாகக் குறைக்கும். ஜோதிடரீதியாக முருகப் பெருமான் செவ்வாய்க் கிரகத்தின் அதிபதி ஆவார். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், அங்காரகத் தாக்கம் அல்லது ரத்த சம்பந்தமான கோளாறுகள் உள்ளவர்கள் தேய்பிறை சஷ்டி விரதத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாலையில் முருகப் பெருமான் ஆலயத்திற்குச் சென்று, முருகனுக்கு செவ்வரளிப் பூக்கள் சாத்தி, நெய் தீபமேற்றி வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

7.7.2026 – செவ்வாய் காளாஷ்டமி, பகவதாஷ்டமி

காளாஷ்டமி என்பது காலத்தையும் வினையையும் கடக்க சிவ-வழிபாட்டை (பைரவர்) மையமாகக் கொண்டது. இந்நாளில் பைர வரை வழிபடுவதால் மரண பயம், நோய்கள் மற்றும் எதிரிகள் தொல்லை நீங்கும். ஜாதகத்தில் உள்ள ராகு-கேது தோஷங்கள் மற்றும் சனி பக வானின் தாக்கங்கள் (ஏழரைச் சனி, அஷ்டமச் சனி) குறையும் என்பது நம்பிக்கை. பொதுவாக மாலையில் பிரதோஷ நேரத் திலோ அல்லது நள்ளிரவிலோ பைரவருக்கு மிளகு தீபம் (கருப்பு துணியில் மிளகு முடிந்து) ஏற்றி, ‘பைரவாஷ்டகம்’ பாராயணம் செய்வது வழக்கம்.

7.7.2026 – செவ்வாய் ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை

கலிக்காம நாயனார் குருபூஜை இன்று. அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவர். ஏயர்கோன் கலிக்காம நாயனார் வேளாண் குடியில் அவதரித்த சிவநெறிச் செல்வர். சிவபக்தியில் உயர்ந்தவர். திருமங்கலம் என்னும் தலத்தில் அவதரித்தவர். திருப் புன்கூர் என்ற திருத்தலத்தில் உள்ள பெருமானுக்கு பல திருப்பணிகள் புரிந்தவர். இவர் மற்றொரு நாயனாரான மானக்கஞ்சாறர் மகளைத் திருமணம் செய்துகொண்டவர். சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவையாரிடம் சிவபெருமான் தூது சென்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகவும் மனம் வருந்தினார் கலிக் காம நாயனார். சுந்தரமூர்த்தி நாயனார் செயலை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், சுந்தரமூர்த்தி நாயனார் மீது கோபமாகவே இருந்தார். இதனை அறிந்துகொண்ட சுந்தரமூர்த்தி நாயனார், கலிக்காம நாயனார் கோபத்தை தீர்க்க வேண்டும் என்று திருவாரூர் ஈசனிடம் மனமுருகி வேண்ட, இவர்கள் இருவரையும் இணைத்து வைக்க வேண்டிய ஈசன் ஒரு திருவிளையாடல் செய்தார்.

கலிக்காம நாயனார் வயிற்றில் சூலை நோய் தந்து சுந்தரமூர்த்தி நாயனாரைப்போய் அதைத் தீர்த்து வைக்கச் சொன்னார். அதன் மூலமாக இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நட்பாகலாம் என்று நினைத்தார். ஆனால், சுந்தரமூர்த்தி நாயனாரிடம் மிகுந்த கோபத்தோடு இருந்த கலிக்காம நாயனார் அவரைச் சந்திக்க விரும்பாமல் தன்னுடைய வயிற்றில் கத்தியால் கீறி வாழ்வை முடித்துக் கொண்டார். கலிக்காமர் இறந்ததைக் கண்டு அவர் மனைவியார் உயிர்விடத் துணிந்த பொழுது சுந்தரமூர்த்தி நாயனார் வருகையை அறிந்து கணவர் உயிர்துறந்த செய்தியை மறைத்து நம்பியாரூரரை எதிர்கொள்ள தம் சுற்றத்தாரை அனுப்பினார். அப்பொழுது சுந்தரமூர்த்தி நாயனார் கலிக்காமரைத்தான் சந்திக்க வேண்டும் என்று சொல்ல அவர் உள்ளே உறங்குகிறார் என்று உறவினர்கள் தெரிவிக்க, சுந்தரர் மனம் ஒப்பவில்லை. அவருக்கு ஏதோ நடந்திருக்கிறது; அவரை நாம் பார்க்க வேண்டும் என்று சுந்தர மூர்த்தி நாயனார் வற்புறுத்த, அவர்கள் கலிக்காமர் இருந்த அறைக்குள் சென்று காட்டினர்.

அங்கே கலிக்காமர் குடல் சரிந்து கிடப்பதைக் கண்ட சுந்தரர், ‘‘என்னைப் பார்க்க மனமின்றி இவர் இறந்தாரா? இதுவன்றோ அசல் சிவபக்தி. இவர் வாழ்வு முடிய நான் காரணமாகலாமா ?இவரைப் பார்க்க முடியாத நானும் இப்பொழுதே உயிர் துறப்பேன் என்று தம் முடைய கையில் உள்ள வாளை எடுத்து தன்னை மாய்த்துக்கொள்ள முயலும் போது இறைவன் அருளால் கலிக்காமர் உயிர் பெற்று எழுந்தார்.
‘‘சுந்தரமூர்த்தி நாயனாருடைய வாளைப் பிடித்துக் கொள்ள ஆரூரர் விழுந்து வணங்கினார். கலிக்காமரும் நம்பியாரூரர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு நண்பர்கள் ஆயினர். இருவரும் இணையாகச் சென்று திருப்புன்கூர் பெருமான் திருவடிகளை வணங்கிப் போற்றினார்கள் பின் திருவாரூர் சென்று பெரு மானை வழிபட்டனர். அமங்கலம் நேர்ந்த இடத்தும் சிவத் தொண்டர் வந்தால் ,அவரை மங்களமாக எதிர்கொண்டு வர வேற்று உபசரித்தல் முறைமை என்பதை உணர்ந்தவர் கலிக்காம நாயனாரின் மனைவியார்.

10.7.2026 – வெள்ளிஅபரா ஏகாதசி

‘அபரா’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ‘‘எல்லையற்ற” அல்லது ‘‘அளவிட முடியாத” என்று பொருள். இந்நாளில் மேற்கொள்ளும் விரதம் ஒருவருக்கு எல்லையற்ற புண்ணியங்களையும், அளவற்ற நன்மைகளையும் தருவதால், இதற்கு ‘அபரா ஏகாதசி’ என்று பெயர் வந்தது.பத்ம புராணத்தில் கிருஷ்ணர், தர்மராஜா யுதிஷ்டிரனுக்கு இந்த ஏகாதசியின் மகத்துவத்தை விவரித்துக் கூறுகிறார். பிரம்மஹத்தி தோஷம், பொய் சாட்சி சொல்வதால் ஏற்படும் பாவம், தவறான வழிகாட்டுதலால் ஏற்படும் கர்ம வினைகள் போன்ற கடுமையான பாவங்களைக்கூட இந்த ஒரு ஏகாதசி விரதம் அழித்துவிடும் என்று ஆன்மிக நூல்கள் குறிப்பிடுகின்றன.இந்நாளில் மகாவிஷ்ணுவை ‘திரிவிக்ரமன்’ (உலகளந்த பெருமாள்) என்ற திருநாமத்தோடு வழிபடுவது வழக்கம். பெருமாளுக்குத் துளசி இலைகளால் அர்ச்சனை செய்வது மிக விசேஷம். தசமி அன்றே (ஏகாதசிக்கு முதல் நாள் இரவு) சாத்வீக உணவை உட்கொண்டு விரதத்திற்குத் தயாராக வேண்டும். ஏகாதசி அன்று முழுமையாகவோ அல்லது நீர், பழங்கள் மட்டும் உட்கொண்டோ உபவாசம் இருக்க வேண்டும். ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் அஷ்டாட்சர மந்திரத்தை ஜெபிப்பதும், விஷ்ணு சஹஸ்ரநாமம், மற்றும் பகவத் கீதை வாசிப்பதும் சிறந்தது. மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் பெருமாளை வணங்கி, அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உள்ளிட்ட சாத்வீக உணவுகளுடன் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

Related Stories: