ஆழ்வார்களின் அருந்தமிழில் வேங்கடவன் பெருமை

திருவோண விரதம் – 2.7.2026

பகுதி 1

திருமலையப்பனை ஆழ்வார்களில், மதுரகவியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் நீங்கலாக, மற்ற ஆழ்வார்கள் அனைவரும் பாடிப் பரவி உள்ளனர். அப்படிப் பாடிய பக்தி பனுவல்கள் ஏராளம். அதில் சில துளிகளை இங்கே அனுபவிப்போம்.
திருமங்கை ஆழ்வார் மனம் வீழ்ந்த இடம் திருமலை
திருமங்கை ஆழ்வார் பெருமாளைத் தரிசிக்க திருவேங்கடம் வந்தார். பெருமாளைப் பார்த்த பரவசத்தில் மகிழ்ச்சி அளவு கடந்தது.
ஆழ்வாரைப் பார்த்த பரவசத்தில் பெருமாளும் இருந்தார்.
ஆழ்வாரைக் கருணையோடு நோக்கிய பார்வையில் ஆழ்வாரின் உள்ளமும் இளகியது.
இப்போது அவர் தன் மனதைப் பார்த்துக் கேட்கிறார்.
அதில் ஒரு கேலி தெரிந்தது.
“என்ன, அடிமையாகிவிட்டாய் போலிருக்கிறதே?” நெஞ்சம் திருப்பிக் கேட்டது.
“யாருக்கு அடிமையானேன்? என்ன சொல்கிறீர்கள்?”
“என்ன ஒன்றும் தெரியாதவன் போல் கேட்கிறாயா? இந்த மலை மேல் “ஆடும் கூத்தனு” க்குத்தான் நீ அடிமையாகி விட்டாய்.”
“என்ன மலையப்பன் ஆடுகின்றானா?”
“அவன் ஆடிய ஆட்டத்தில்தானே, மனமே, உன் ஆட்டம் அடங்கியது.”
“என்ன செய்வது? பெருமாளைப் பார்த்தவுடன் நான் விழுந்துவிட்டேன்.”
“பிறகு என்ன செய்வாய்? ‘நின்றதும் வேங்கடம்’ அல்லவா…”
“ஆமாம்.. இந்தப் பெருமாளை, தாமரை மலர் அமர்ந்த பிரம்மாவும்
சிவனாரும், இந்திரனும் வணங்குகிறார்கள்…. அப்புறம் நான் மட்டும் என்ன?”
“ அது சரி அங்கே பார்…. பலரும் பாடிப் பணிந்து ஏத்தும் காட்சியை…”
“ஆமாம்… பார்த்தேன்.. மனதை அவன் திருவடியில் சமர்ப்பிப்பது தானே ஆத்ம சமர்ப்பணம்… அதற்குத்தானே அவன் பரமபதத்தை விட்டு மலைமேல் காலம் காலமாய் நிற்கிறான்…”
“அடடா.. பிரம்மலோகம் , சிவலோகம், இந்திரலோகம் எல்லாம் இங்கே வந்துவிட்டதே,,, ஆயினும், மனசே, எனக்கு உன்னை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.”
“ஏன்,பரிதாபம்?”
“நேற்றுவரை நீ எப்படி இருந்தாய்?”
“எப்படி இருந்தேன்?”
“உண்டதையே உண்டு, உறங்கிய பின் மீண்டு, கண்டதையே பேசிக் களிப்புற்றுக்கிடந்தாயே…. நினைவில்லையா….. ஆனால் இன்று அப்படியே மாறி விட்டாய். உன்னுடைய குணங்களை விட்டுவிட்டு அந்த அனந்தனின் திருவடியில் விழுந்து அடிமைத் தொழில் பூண் டாய் … காலம் கடந்து செய்தாலும் இச்செயல் எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியைத் தருகிறது.. நான் மகிழ்ந்தேன்.. என் நெஞ்சமே! நீ வாழ்க!”
இப்படித் தன்னுடைய நெஞ்சத்தை வாழ்த்துகின்றார் திருமங்கையாழ்வார்.
“கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய்
என் நெஞ்ச மென் பாய் துணிந்துகேள்,
பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா,
ஆடு தாமரையோனு மீசனும்
அமர்கோனும் நின்றேத்தும், வேங்கடத்து
ஆடு கூத்தனுக் கின்று
அடிமைத்தொழில் பூண்டாயே.”
– என்பது பெரிய திருமொழி பாசுரம்.
ஒரு திரியை அணைக்கிறது ஒரு திரியைத் தூண்டுகிறது
முதல் திருவந்தாதி பாடிய, முதல் ஆழ்வார்களில் முதல்வரான பொய்கை ஆழ்வார் ,மிக அருமையான ஒரு பாசுரத்தைப் பாடியுள்ளார். முதல் திருவந்தாதியில் திருமலை குறித்த முதல் பாசுரம் இது.
திருவேங்கடமலை இரண்டு காரியங்களைச் செய்கிறது.
* எரிகின்ற ஒரு திரியை அணைக்கிறது.
* இன்னொரு திரியைத் தூண்டுகிறது.
இந்த இரண்டு திரிகளும் ஒரே நேரத்தில் செயல்படுவது கிடையாது.
இருட்டும் வெளிச்சமும் ஒரே நேரத்தில் இருப்பதற்கான வழி இல்லை.
வெளிச்சம் இல்லாத நிலை இருட்டு. இருட்டு நீங்கிய நிலை வெளிச்சம்.
நம்முடைய கவலைகளுக்குக் காரணம், நம்முடைய வினைகள் பற்றி எரிந்து கொண்டே இருப்பதுதான்.
அந்த வினைகள் எரிவது அடங்கினால்தான், நம்முடைய பாவங்கள் நீங்கி, மகிழ்ச்சியோடு இருக்கமுடியும். அந்த வினைத்திரியை எப்படி அடக்குவது?
இருட்டை விலக்க வேண்டும் என்று சொன்னால் வெளிச்சம் வேண்டும் அல்லவா?
நம்முடைய வினைகள் எல்லாம் போக வேண்டும் ; பாவங்கள் எல்லாம் நசிக்க வேண்டும் என்று சொன்னால், மனதிலே இன்னொரு விளக்கு எரிய வேண்டும். அந்த விளக்கு எரிய, திருப் பதிக்குச் செல்ல வேண்டும். அந்த ஏழு மலையானைத் தரிசிப்பது கூட அப்புறம்தான்.
அந்த மலையைப் பார்த்தாலே போதும். மலையானது சுட்டெரிக்கும் வினைத்திரியை அணைத்துவிட்டு புண்ணியமான மனத்திரியைத் தூண்டி விடும். இதைத்தான் பொய்கை ஆழ்வார் மிக அற்புதமான ஒரு பாசுரத்தில்சொல்லுகின்றார்.
எழுவார் விடை கொள்வார்,
ஈன் துழாயானை,
வழுவா வகை நினைந்து, வைகல்
தொழுவார்,
வினைச் சுடரை நந்துவிக்கும்
வேங்கடமே, வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –
பரமபதத்தில் இருக்கும் நித்ய சூரிகள் கூட, திருமலையிலேயே கைங்கர்யம் செய்து கொண்டு இருந்து விடலாம் என்ற ஆவலைத் தூண்டும் சிறப்பு திருமலைக்கு உண்டு என்பது… வினையான சுடரை அவிப்பவனும் அவன்.
மனதில் உள்ள சுடரைத் தூண்டிப் பிரகாசிக்கச் செய்வதும் அவன்.
இது நடப்பது திருமலையில் என்பது பொய்கை ஆழ்வாரின் அனுபவம்.
திருமலையப்பனும் திருவரங்கநாதனும்…
ஆழ்வார்களில் திருப்பாணாழ்வார் 10 பாசுரங்களால் வேதத்தின் சாரத்தை பிழிந்து கொடுத்திருக்கிறார்.
“என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்று, எம்பெருமானைக் கண்டபிறகு, இந்தக் கண்களுக்கு,வேறு பொருள் லட்சியமே இல்லை என்று காட்டித் தந்திருக்கிறார்.
எது மிக உயர்வான ஒரு இன்பமோ, அந்த இன்பத்தை அடைந்த பிறகு, மற்ற இன்பங்கள் எல்லாம் அதைவிடக் கீழானதாகவே இருக்கும்.
“என் அமுதன்” என்று யாரைச் சொல்லுகின்றார் பாணர்?
காவிரிக் கரையில் நின்றுகொண்டு, யாழ் இசைத்து அரங்கனைப்பாடியவர், நிறைவாக அந்த அரங்கனோடு உள் புகுந்தவர் திருப்பாணாழ்வார் என்கிற சரித்திரம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், இங்கே கேள்வி.அவர் மலையப்ப சுவாமியைப் பாடியிருக்கிறாரா?
“பாடியிருக்கிறார்” என்றுதான் சொல்ல வேண்டும்.
வைணவ சமயமரபிலே நேரடியாக ஒரு பதிகமோ, பாசுரமோ பாடித்தான் மங்களாசாசனம் செய்ய வேண்டும் என்கின்ற அவசியமே இல்லை.
ஏதாவது ஒரு பாசுரத்தில், ஒரு திவ்ய தேசத்தைப் பற்றிய ஒரே ஒரு குறிப்பு வந்து விட்டாலும், அந்த ஆழ்வார், அந்த திவ்ய தேசத்தை மங்களா சாசனம் செய்ததாகத்தான் பொருள். அந்த அடிப்படையில் திருப்பாணாழ்வார் திருவரங்கன் மீது பத்து பாசுரங்கள் பாடியிருக்கிறார்.
அவர் திருவேங்கடவனை இரண்டு பாசுரங்களில் மங்களாசாசனம் செய் திருக்கிறார் என்பதால், அவர் திருவேங்கடவனையும் பாடியிருக்கிறார் என்பது ஆசாரியர்கள் நிர்ணயம்.
இந்த அடிப்படையில் திருமலை அப்பனை அவர் எப்படி மங்களாசாசனம் செய்கிறார் என்கிற ஒரு பாசுரத்தை அனுபவிப்போம்.
“அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள்மதிள்
அரங்கத்தம்மான் திருக்கமலப்பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே.”
முதல் பாசுரத்திலேயே அவருக்கு திருமலையப்பன் நினைவு வந்துவிடுகிறது.
பரிமளம் மிக்க குளிர்ந்த சோலைகளை உடைய திருவேங்கட மலையில் வந்து தங்கி, இன்றளவும் நமக்கு சேவை சாதித்து வரும்…
* அவன்தான் ஆதிபிரான்.
* அவன் தான் அடியார்க்கு என்னை ஆட்படுத்தியவன்.
* அவன் தான் தேவாதி தேவன்.
* அவன் தான் ஒரு கைம்மாறும் கருதாத சுத்தியை உடைய நிமலன்.
* அவன் தான் எந்தவித உதவியையும் தன்னுடைய பேறாகக் கருதிச் செய்யும் நின்மலன்.
* அவன் தான் தலைவன் தொண்டன் என்கின்ற முறை வழுவாத படி சேஷ, சேஷி பாவத்தோடு நியாயமே சொல்லும் பரமபதத் தலைவன்.
* அவன்தான் இப்பொழுது அர்ச்சையில், என் கண்ணெதிரே காட்சி தரும் நீண்ட மதில்களை உடைய திருவரங்கத்தில் கண் வளர்ந்து அருளுகின்ற அழகிய மணவாளன்.
திருப்பாணாழ்வார் திருவரங்கத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய் தாலும்கூட, “திருமலை அப்பன்தான் இங்கு வந்து படுத்துக் கிடக்கின்றான். இதற்கு முன்னாலே திருமலை வந்து நின்றவன்” என்று மங்களாசாசனம் செய்கின்ற அழகைக் கவனிக்க வேண்டும்.
இங்கே “விரையார் பொழில் வேங்கடவன்” என்பது மிக முக்கியமான பதம்.
பரிமளம் நிறைந்த திருச்சோலைகளை உடைய திருமலையைத்தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டவன்.
பரமபதத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்த எம்பெருமான், இடையில் சற்று இளைப்பாற, கால் தாழ்ந்த பூமி என்று திருமலையைச் சொல்வார்கள்.
எனவே, திருவரங்கத்திற்கு முன்னாலேயே வந்து நின்ற தலம் என்கின்ற சிறப்பு திருமலைக்கு உண்டு.
அதனால்தான், இத்தலத்தை “விண்ணுக்கும் மண்ணுக்கும் வைப்பு” என்று ஆழ்வார்கள் பாடுகின்றார்கள்.
மண்ணவர்கள் ஆகிய சம்சாரிகள் எம்பெருமானைக் காணத்திருமலையில் ஏறுகின்றார்கள் . விண்ணோர்கள் அதே எம்பெருமானைக் காண திருமலைக்கு வந்து இறங்குகின்றார்கள்.
இருவரும் சந்திக்கின்ற ஒரு இடம் என்பது திருமலைக்ப்பெருமை.
“சந்தி செய்ய நின்றான்” என்பது “சந்தியாவந்தன வழிபாட்டை”க் குறித்தாலும் சந்திப்பு நிகழ்கின்ற இடம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். (சந்தி – சந்தித்தல்).
“வேங்கடவன் என்கின்ற சொல் அர்ச்சாவதாரத்துக்கு பொற்கால் பொலிய விட்ட விடம்” என்று ஆசாரியர்கள் உரை எழுதுகிறார்கள்.
ஆண்டாள் மணந்தது யாரை? மலையப்பனையா? அரங்கனையா?
சங்கத் தமிழ் பாடிய ஆண்டாள் தான் யாரை மணக்கப் போகிறேன் என்பதை வெகு நேர்த்தியாகத் தெரிவித்துப் பாடும் பாசுரம்தான் நாச்சியார் திருமொழியில் முதல் பாசுரம்.
தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு
தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி
உன்னையு மும்பியை யும்தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே..
ஆண்டாள் இரண்டு பிரபந்தங்களை அருளிச் செய்திருக்கிறார்.
1 திருப்பாவை 2. நாச்சியார் திருமொழி
திருப்பாவை மார்கழி மாதத்தில் பாட ஆரம்பித்தாள். மார்கழித்திங்கள் என்று மாதத்தின் பெயரைச் சொல்லி தொடங்கினாள்.
(தொடரும்)

Related Stories: