ஜம்மு: 2026-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை இன்று காலை தொடங்கி உள்ளது. 57 நாட்கள் நீடிக்கும் இந்த யாத்திரைக்காக பால்தல், பஹல்காம் முகாம்களில் இருந்து பக்தர்களின் முதல் குழு அமர்நாத் புனித யாத்திரைக்கான பயணத்தை தொடங்கி உள்ளது.
தெற்கு காஷ்மீரில் இமயமலை பகுதியில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றான இந்த புனித தலம், கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரியான 48 கி.மீ. தூர நுன்வான்-பஹல்காம் வழித்தடம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள குறுகிய ஆனால் செங்குத்தான 14 கி.மீ. தூரபல்தால் வழித்தடம் மூலமாக இந்த புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் நடப்பாண்டிற்கான அமர்நாத் புனித யாத்திரை பஹல்காம், பல்தால் அடிவார முகாம்களில் இருந்து இன்று ஒரே நேரத்தில் தொடங்கியுள்ளது.
பஹல்காம், பல்தால் ஆகிய 2 முகாம்களை நோக்கி ஜம்மு பகவதி நகர் யாத்ரி நிவாஸில் இருந்து முதல் பக்தர்கள் குழு நேற்று புறப்பட்டது. இவர்களின் பயணத்தை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஹர ஹர மகாதேவ் உள்ளிட்ட பக்தி முழக்கங்களுக்கு மத்தியில்,பனி லிங்கத்தை தரிசிக்க முதற்கட்டமாக 4,800-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். இந்த முதல் குழுவில் 816 பெண்கள், சாதுக்கள் உட்பட மொத்தம் 4,822 பக்தர்கள் இடம் பெற்றுள்ளனர். சுமார் 57 நாட்கள் நீடிக்கும் இந்த யாத்திரை வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நிறைவடையும். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை செல்வதற்கு 3.90 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
