டெல்லி: ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகளில், அவரது மகனும் ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளவருமான மொஜ்தபா கமேனி கலந்து கொள்ள மாட்டார் என்று ஈரான் அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஈரானிய உச்ச தலைவரின் பிரதிநிதியான அயதுல்லா ஹக்கீம் இலாஹி, இந்தியா டுடேவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மொஜ்தபா கமேனியின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், ஈரான் வேறு வழியின்றி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
மொஜ்தபா கமேனி நாட்டின் புதிய உச்சத் தலைவராக அறிவிக்கப்பட்ட போதிலும், பிப்ரவரி இறுதிக்குப் பிறகு இதுவரை ஒருமுறை கூட பொதுவெளியிலோ அல்லது வீடியோவிலோ தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அலி காமெனியின் இறுதிச்சடங்குகள் ஜூலை 4ஆம் தேதி டெஹ்ரானில் தொடங்குகின்றன. டெஹ்ரானின் தென் பகுதி புனித நகரா குவோமில் அந்தச் சடங்குகள் நிறைவுற்று ஜூலை 9ஆம் தேதி அவரது சொந்த நகரான மஷாத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. பல வாரங்களாக துக்கம் கடைப்பிடிக்கப்பட்ட பின்னர் அவரது இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
ஈரானில் ஒரு வார காலத்திற்கு இறுதிச் சடங்கு ஊர்வலங்கள் நடைபெற உள்ள நிலையில், நாட்டின் புதிய தலைவரே தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் நிலவுவது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளனர்.
