×

பிரதமர்கள் மோடி-தகாய்ச்சி சந்திப்பில் இந்தியா-ஜப்பான் இடையே புதிய ஒப்பந்தங்கள்: பொருளாதாரம், ராணுவம், எரிசக்தி உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை

புதுடெல்லி: பிரதமர்கள் மோடி – சனே தகாய்ச்சி இடையேயான உச்சி மாநாட்டில் இந்தியா – ஜப்பான் இடையே உறவுகளை வலுப்படுத்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா – ஜப்பான் இடையேயான 16வது உச்சி மாநாட்டில் பங்கேற்க, ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி முதல் முறையாக 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி, தகாயிச்சியை வரவேற்று, அரசு உயர் அதிகாரிகளை அறிமுகப்படுத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து, ஐதராபாத் இல்லத்தில் பிரதமர்கள் மோடி – தகாய்ச்சி இடையேயான உச்சி மாநாடு நடந்தது. இதில், வர்த்தகம், முதலீடு, பொருளாதார பாதுகாப்பு, எரிசக்தி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு மற்றும் மக்கள் பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் இந்தியா-ஜப்பான் உறவுகள் குறித்து இரு பிரதமர்களும் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, பொருளாதார ஒத்துழைப்பு, ராணுவ தளவாடங்களை இணைந்து உருவாக்குவதற்கான ஒப்பந்தம் மற்றும் எண்ணெய் நெருக்கடிகளைச் சமாளிக்க நடவடிக்கைகள் உட்பட இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது:

இன்றைய நிச்சயமற்ற காலகட்டத்தில், பொருளாதார பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை இந்தியாவும் ஜப்பானும் முழுமையாக புரிந்துகொள்கின்றன. குறைக்கடத்திகள், குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பொருட்கள் போன்ற முக்கியத் துறைகளில் விநியோகச் சங்கிலியின் மீள்திறனை நாம் வலுப்படுத்துவோம். ஜப்பான் உதவியுடன் இந்தியாவில் 1,000 பயோகேஸ் மற்றும் இயற்கை உர ஆலைகள் அமைக்கப்படும்.

இது இந்தியாவின் கிராமங்களில் நிலைத்தன்மை, செழிப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களுக்குப் புதிய உத்வேகம் அளிக்கும். இந்தியா மற்றும் ஜப்பான் முதல்முறையாக பாதுகாப்புத் துறையில் இணைந்து ராணுவ உபகரணங்களை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளன. முதற்கட்டமாக கடற்படைக்கான ரேடியோ ஆண்டெனா ஒன்றை இரு நாடுகளும் சேர்ந்து தயாரிக்க உள்ளன. எண்ணெய் விலை திடீரென உயர்ந்தாலும் அதனால் பாதிப்பு குறைய இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

மேலும், பசுமை ஹைட்ரஜன், மேம்பட்ட பேட்டரி தொழில்நுட்பம், அணுசக்தி ஆகிய துறைகளிலும் இணைந்து பணியாற்ற உள்ளன. மருந்து, மருத்துவ சாதனங்கள் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறைகளிலும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. கார் உற்பத்தியில் இரு நாடுகளும் பெற்ற வெற்றியைப் போல, இனி கப்பல் கட்டும் தொழில், விமானத் துறை, சரக்கு போக்குவரத்து ஆகிய துறைகளிலும் இணைந்து வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி பேசுகையில், முதலீடு மற்றும் புதுமை தொழில்நுட்பங்களின் மூலம் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாக கூறிய அவர், இந்தியாவை 2047-க்குள் வளர்ந்த நாடாக மாற்றும் ‘விக்சித் பாரத்’ இலக்கை பிரதமர் மோடி முன்னெடுத்து வருவதையும் பாராட்டினார்.

* ‘இளைய சகோதரியே’ பிரதமர் மோடி பாசமழை
செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி தனது பேச்சை பாசமழையுடன் தொடங்கினார். ‘‘என இளைய சகோதரி தகாயிச்சி அவர்களே’’ என பிரதமர் மோடி உணர்வுப்பூர்வமாக பேசினார். இதை மொழிபெயர்ப்பு வசதி மூலம் கேட்ட தகாய்ச்சி, பிரதமர் மோடியின் பாசத்தை ஏற்றுக் கொண்டார். மேலும், பேச்சின் தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்க ‘நமஸ்தே’ என இந்தியில் கூறிய மோடி, ‘கொன்னிச்சிவா’ என ஜப்பான் மொழியிலும் வரவேற்றார். அதே போல, உரையை நிறைவு செய்ததும் ‘தன்யவாத்’ என இந்தியில் நன்றி கூறியதோடு, ‘அரிகட்டோ கோசாயிமாசு’ என ஜப்பான் மொழியிலும் நன்றி தெரிவித்தார்.

* அடுத்த 10 ஆண்டுகளில் 10 டிரில்லியன் இலக்கு
பிரதமர் மோடி பேசுகையில், ‘‘கடந்த ஓராண்டில் இந்தியா மற்றும் ஜப்பான் நிறுவனங்கள் 100-க்கும் மேற்பட்ட வணிக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (ரூ.95,000 கோடி)அதிகமான முதலீடு இந்தியாவுக்கு வரவுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 10 டிரில்லியன் யென் (ரூ.1.69 லட்சம் கோடி) முதலீடு செய்வதும், இந்தியாவில் செயல்படும் ஜப்பான் நிறுவனங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : India ,Japan ,PM Modi ,Takaichi ,New Delhi ,Prime Ministers ,Modi ,Sane Takaichi ,16th India-Japan Summit ,Prime Minister… ,
× RELATED கேரள அரசின் அனுமதி இல்லாமல் விழிஞ்ஞம்...