×

தென்மேற்கு பருவமழை தீவிரம் – வடமாநிலங்களில் கொட்டி தீர்க்கும் கனமழை

மும்பை: நாட்டின் வட மாநிலங்கள் மற்றும் வடமேற்குப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஜூன் மாத முதல் பாதியில் நிலவிய மழை பற்றாக்குறையைத் தொடர்ந்து, ஜூன் 29 முதல் பருவமழை தீவிரமடைந்து உள்ளது.

தற்போது தலைநகர் டெல்லி, மும்பை உள்ளிட்ட பல வட இந்தியப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக உள்ளதோடு, அடுத்த சில நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக பல வடமாநிலங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. மும்பையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் முக்கிய சாலைகள் குளம் போல் மாறின. டெல்லி, மகாராஷ்டிரா, கோவா, கொங்கன், தெற்கு குஜராத் மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மிக கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தென்மேற்கு பருவமழை இமாச்சல பிரதேசத்தில் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. இந்த பருவமழை வழக்கமாக ஜூன் 25-ல் அங்கு தொடங்கும், ஆனால் நடப்பாண்டில் சுமார் ஆறு நாட்கள் தாமதமாக துவங்கியுள்ளது. மேலும் உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகள் முழுவதையும் பருவமழை சூழ்ந்துள்ளது.

தலைநகர் டெல்லியை பொறுத்த வரை பருவமழை காரணமாக இடி, மின்னலுடன் கூடிய பரவலான கனமழை பெய்து வருகிறது. அதே நேரம் பருவமழையின் அடுத்தகட்ட நகர்வாக ராஜஸ்தானின் பல பகுதிகளில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளது.

Tags : Mumbai ,Delhi, Mumbai ,
× RELATED நீட் மறுதேர்வில் தவறான கேள்வி- மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிப்பு