திருவொற்றியூர்: எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் ரூ.4.62 கோடி செலவில் திறக்கப்பட்ட படகு குழாம் மூன்று மாதம் மட்டுமே இயங்கிய நிலையில், குளத்தில் தண்ணீர் வற்றியதால் தற்காலிகமாக மூடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 3வது வார்டு எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் ரயில்வே துறைக்கு சொந்தமான மழைநீர் சேமிப்பு குளம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்தை ஐடிசி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் என்ற தனியார் அமைப்பு சார்பில் சுமார் ரூ.30 லட்சம் செலவில் தூர்வாரி ஆழப்படுத்தி கரை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் அன்னை சிவகாமி நகர் ரயில்வே துறை குளத்தில், சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் சார்பில் ரூ.4.62 கோடி செலவில் சுற்றுச் சுவர், நடைபாதை மற்றும் படகு குழாம் அமைக்கப்பட்டு கடந்த மார்ச் 1ம் தேதி பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. மேலும் உணவகம், சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தமிழ்நாடு சுற்றுலாத்துறை பராமரித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் இறுதியில் கடுமையான வெயில் காரணமாக குளத்தில் தண்ணீர் படிப்படியாக குறைந்து, பல இடங்களில் மணல் திட்டுகள் தெரிய ஆரம்பித்தது.
இதனால் குளத்தில் படகை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மூன்று மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் படகு சவாரி செய்ய வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இந்நிலையில் இந்த குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேங்கவும், தடையில்லாமல் படகுகளை இயக்கவும் திட்டமிட்ட சுற்றுலாத்துறை, குளத்தை ஆழப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு ஆழப்படுத்தினாலும் மழைக்காலம் வந்தால் தான் இந்த குளத்தில் தண்ணீர் தேங்கும் என்ற நிலையில், இங்கு மீண்டும் படகு சவாரியை துவக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது.
இதனிடையே அன்னை சிவகாமி நகரில் ஆய்வு மேற்கொள்ளாமல் அவசரகதியில் படகு குழாம் திட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்தியதாகவும், இதற்காக தேவை இல்லாமல் மக்கள் வரிப்பணத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் செலவிட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் படகு சவாரி இல்லை என்றாலும் நடைபயிற்சி செய்யும் வகையில் இந்த ரயில்வே குளத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரவை விட செலவு அதிகம்
அன்னை சிவகாமி நகரில் ரயில்வே துறைக்கு சொந்தமான குளத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட படகு குழாம், வருவாயை விட செலவு அதிகமாவதாகவும், படகு குழாம் கட்டண வசூல் வருவாயில் ரயில்வே துறை பெரும் பகுதியை பங்கு கேட்பதால் படகு குழாமை மீண்டும் சுற்றுலாத்துறை செயல்படுத்துமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக கூறப்படுகிறது.
