- அயோத்தி ராம் கோயில் அறக்கட்டளை
- பொதுச்செயலர்
- அயோத்தி
- அயோத்யா காவல்துறை
- சம்பத் ராய்
- அயோத்தி ராம் கோயில்
- சமாஜ்வாடி கட்சி
- அயோத்தியா ராமர் கோவில்…
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை தொடர்பான முறைகேடு புகார்கள் தொடர்பாக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயிடம் விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை அயோத்தி காவல்துறை பதிவு செய்துள்ளது. அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு நடந்ததாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து ஜூன் 7 அன்று இந்த சர்ச்சை முதலில் வெடித்தது.
அப்போது, நன்கொடை மேலாண்மை அமைப்பின் உள் தணிக்கையின் போது குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என்று கூறி ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசு ஜூன் 13 அன்று ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது.
இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கையில், கோயில் காணிக்கைகளை கையாளுதல் மற்றும் எண்ணுதல் தொடர்பான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் பெருமளவில் மீறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. ஜூன் 23 அன்று சமர்ப்பிக்கப்பட்ட இடைக்காலக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ஜூன் 25 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, கோயிலின் காணிக்கை எண்ணும் பணியுடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 6 பேரிடமிருந்து சுமார் ரூ. 80 லட்சம் ரொக்கம் மற்றும் சில வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ராமசங்கர் யாதவ் (எ) தின்னு யாதவ், அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் என்பவரின் முன்னாள் ஓட்டுநர் ஆவார்; சிறப்பு விசாரணைக் குழுவின் தகவலின்படி, இவர் பல காணிக்கைப் பெட்டிகளின் சாவிகளைத் தன்வசம் வைத்திருந்தார். இது நிர்ணயிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை றும் செயலாகும்.
இதற்கிடையில், நீதிமன்றத்திடம் அனுமதி பெற்ற பிறகு, நேற்று மாவட்டச் சிறையில் வைத்து கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அவினாஷ் சுக்லாவிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஜூன் 5 அன்று அவினாஷ் சுக்லாவிடமிருந்து ரூ. 20 லட்சத்தை மீட்டது. இந்த சர்ச்சைக்காக தார்மீகப் பொறுப்பேற்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சம்பத் ராய் விலக முன்வந்தார். இந்த நிலையில் நேற்று அயோத்தி போலீசார் சம்பத்ராயிடம் அதிரடி விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலத்தையும் பதிவு செய்தனர்.
சம்பத் ராயின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை ஒரு காவல் அதிகாரி உறுதிப்படுத்தினார்; ஆனால் விசாரணை எப்போது, எங்கே அல்லது எவ்வளவு நேரம் நடைபெற்றது என்பது குறித்த விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார். ஆனால் அயோத்தி காவல் அதிகாரி அசுதோஷ் திவாரி, சம்பத் ராயின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அயோத்தியில் கார்சேவக் புரத்தில் உள்ள அவரது பாரத் குட்டி இல்லத்திற்குச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* 100 கோடி இந்துக்களின் நம்பிக்கை மீதான தாக்குதல்
அயோத்தி ராமர் கோயில் நன்கொடைகளை முறைகேடு செய்தவர்களைப் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் பாதுகாப்பதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியது. அயோத்தி நன்கொடைகளில் நடைபெற்ற இந்த திருட்டை 100 கோடி இந்துக்களின் நம்பிக்கையின் மீதான தாக்குதல் என்று வர்ணித்த காங்கிரஸ், கோயில் கட்டுமானத்திற்கான பெருமையை எப்படித் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டாரோ, அதேபோல இதற்கான பொறுப்பையும் மோடி ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ பிறரின் செல்வத்தைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்வதும், அதே நேரத்தில் ராமனின் பெயரை உச்சரிப்பதுமே மோடி மற்றும் அவரது சகாக்களின் ஒரே கனவு. ஸ்ரீ ராமர் கோயில் நன்கொடைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தால் ஒட்டுமொத்த நாடும் வேதனையடைந்துள்ளது. குடிமக்களின் அழுத்தத்தின் காரணமாக, சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கைக்குப் பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது; ஆனால் இத்தனை நாட்கள் ஆகியும், முக்கியக் குற்றவாளிகள் ஆர்எஸ்எஸ்-பாஜக உடனான தொடர்புகள் காரணமாக சுதந்திரமாக வெளியே சுற்றித் திரிகிறார்கள்’ என்றார்.

* ஜூலை 6ல் கூடுகிறது ராமர்கோயில் அறக்கட்டளை
நன்கொடைத் திருட்டு விவகாரத்தைத் தொடர்ந்து அறக்கட்டளையின் இரண்டு மூத்த உறுப்பினர்கள் ராஜினாமா செய்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அயோத்தியில் ஜூலை 6ஆம் தேதி ராமர் கோயில் அறக்கட்டளை கூடவுள்ளது. முன்னதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் கூட்டம் ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் என்று விஎச்பி தலைவர் அலோக் குமார் ெதாிவித்த நிலையில் இக்கூட்டம் ஒரு நாள் முன்னதாகவே நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் உறுப்பினர் அனில் மிஸ்ரா ஆகியோர் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர்.
* அயோத்திக்கு புறப்பட்ட காங். குழுவினருக்கு வீட்டுக்காவல்
நன்கொடைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி ஆளும் பாஜவை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்ல முயன்ற உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் மற்றும் அக்கட்சியின் குழுவினர் தடுக்கப்பட்டனர். தன்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாகக் கூறிய அஜய் ராய், ராமர் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி கிடைக்கும் வரை அயோத்தியை விட்டு வெளியேறப் போவதில்லை என்று தெரிவித்தார்.
அயோத்தி பயணத்திற்காகத் தனித்தனியாகச் சென்ற காங்கிரஸ் பிரதிநிதிகள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர், வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்டனர் அல்லது காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர். இருப்பினும், அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிஷோரி லால் சர்மா (அமேதி), ராகேஷ் ரத்தோர் (சீதாபூர்), உஜ்வல் ராமன் சிங் (பிரயாக்ராஜ்) மற்றும் தனுஜ் புனியா (பராபங்கி) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
* 400 தனியார் பாதுகாப்புப் பணியாளர்களிடம் விசாரணை
அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் முறைகேடாகக் கையாளப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்த விசாரணையில், தற்போது அக்கோயிலுடன் தொடர்புடைய 400 தனியார் பாதுகாப்புப் பணியாளர்களின் பங்கும் ஆராயப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதன்படி சுமார் 400 தனியார் பாதுகாப்புப் பணியாளர்கள் விசாரணையின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்; அவர்களின் பணி விவரங்கள், பணிபுரியும் முறைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
* மோடி, யோகிக்கு எதிராக சர்ச்சை பேனர் வைத்த காங். தலைவர் மகன் கைது
உத்தரப் பிரதேசத்தின் ஹைதர்கர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் வாய்கள் டேப் (ஒட்டும் நாடா) மூலம் மூடப்பட்டிருப்பது போன்ற சர்ச்சைக்குரிய விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டன. அயோத்தி ராமர் கோயில் நன்கொடை, தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்தப் பலகைகள் தொடர்பாக, முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஏ.பி. கௌதமின் மகன் ஜெயந்த் கௌதம் ைகது ெசய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
