சேலம், ஜூன் 30: சேலம் மாவட்டத்தில் நாளை முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய், இரட்டைக்குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்றுநோய் ஆகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர் மற்றும் பண்ணைக்கழிவுகள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது.
இந்த கோமாரி நோயினால் மாடுகளில் சினைபிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குறைதல், தோல் மற்றும் தோல் பொருட்களின் மதிப்பு இறக்கம், எருதுகளின் வேலைதிறன் பாதிப்பு மற்றும் கன்றுகளில் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு கால்நடை வளர்ப்போருக்கு பெரும் இழப்பு நேரிடுகிறது. இக்கொடிய நோயை தடுக்கும் பொருட்டு கால் மற்றும் வாய் நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாநிலத்தில் உள்ள அனைத்து மாட்டினம் மற்றும் எருமை இனங்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாளை (1ம்தேதி) முதல் ஆகஸ்ட் 10ம்தேதி வரை அங்கீகரிக்கப்பட்ட செயல்திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 4மாத வயதுக்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு அந்தந்த ஊராட்சியில் உள்ள கால்நடை மருந்தகப்பகுதிகளில் 149 குழுக்கள் மூலம் 9வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. எனவே விவசாயிகள், தங்கள் பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் நாளில், தவறாது கால்நடைகளை கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
