சேலம், ஜூலை 8: சேலம் அம்மாபேட்டை மண்டலம் 43வது வார்டுக்கு உட்பட்ட எருமாபாளையம் மெயின் ரோடு, கிச்சிப்பாளையம், குப்பைமேடு சாலை, செந்தில் நகர், சிவா நகர், அழகு நகர், செல்வ நகர், கடம்பூர் முனியப்பன் கோவில் தெரு, முத்து மாரியம்மன் கோயில் தெரு, சன்னியாசிகுண்டு பிரதான சாலை மற்றும் எக்ஸ்டன்சன் சாலை ஆகிய தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைப்பது தொடர்பாகவும் சில பகுதிகளில் புதிய சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பது தொடர்பாகவும், மாநகராட்சி கமிஷனர் லலித் ஆதித்ய நிலம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வருகை பதிவேடு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் மாநில காப்பீடு போன்ற திட்டங்கள் முறையாக பணியாளர்களின் கணக்கில் முறையாக வரவு வைக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் குறித்த நேரத்தில் வீடுவீடாக சென்று தேங்காய் மட்டை, பிரிட்ஜ், ஏசி, டயர், தண்ணீர் தொட்டி, சின்டெக்ஸ் டேங்க் ஆகிய இடங்களில் பார்வையிட வேண்டும். அப்போது கொசுப்புழு உற்பத்தி உள்ளது கண்டறிந்தால் மருந்து தெளித்து கொசு உற்பத்தியை அழிக்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநகர நலஅலுவலர் ராம்குமார், கவுன்சிலர்கள் குணசேகரன், இமயவர்மன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
