சேலம், ஜூலை 2: சேலம் மாநகராட்சி பள்ளப்பட்டி ஏரி பூங்காவில் நடைபயிற்சி (வாக்கிங்) செய்வதற்காக நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்துக்குட்பட்ட பள்ளப்பட்டி ஏரி பகுதியில் ரூ.30 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து, மறு சீரமைக்கப்பட்டு புதுபொலிவுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பள்ளப்பட்டி, சத்திரம், 3ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர். பூங்கா நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5 என ஒப்பந்ததாரரால் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
தினமும் காலை நேரத்தில் இங்கு பலர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல 100க்கும் மேற்பட்டவர்கள் நடைபயிற்சிக்கு வந்துள்ளனர். அப்போது ஒப்பந்ததாரர், நடைபயிற்சி செய்வதற்கு மாத கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை செலுத்தினால் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் அவ்வாறு மாத கட்டணம் செலுத்த விரும்பவில்லை எனில் தினமும் ரூ.10, வாகனம் நிறுத்த ரூ.10 செலுத்திவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பூங்காவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
கான்டிராக்டர், ஒப்பந்த விதிமுறையில் வாக்கிங் செல்வதற்கு ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள விவரத்தை கூறினார். இதை தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் இலவச அனுமதி குறித்து மாநகராட்சியில் மனு அளிக்குமாறு அறிவுறுத்தி சமாதானப்படுத்தினர். இதைதொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
