சேலம், ஜூலை 3: சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நிறுத்திக்கொள்வதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேலம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு தினசரி 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதைதவிர பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டுக்கும், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஜங்ஷனுக்கும் தினசரி நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் புதிய பஸ் ஸ்டாண்டில் எப்போதும் பஸ்கள் நெருக்கமும், பயணிகள் கூட்டமும் இருந்து கொண்டே இருக்கும். புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வரும் டவுன் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்கு வெளிப்பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.
பஸ் ஸ்டாண்டின் நுழைவுவாயில் அருகே பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் ஸ்டேஷனுக்கு எதிர்புறத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதைதவிர புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் ஸ்டேஷன் எதிர்புறத்திலும், பஸ் ஸ்டாண்டு நுழைவு வாயில் எதிர்புறத்திலும் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டுக்கு வரும் டவுன் பஸ்கள் நின்று பயணிகளை இறக்கவும், ஏற்றிச்செல்லவும் மிகவும் சிரமப்படுகின்றன.
இதனால் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் அங்கு வாகனங்களை நிறுத்தி வைக்காத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
