பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை அமைச்சர் செங்கோட்டையன் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்: அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

 

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளனர். கோபியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளி செல்லும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சாதி சான்றிதழ் வாங்குவதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்க மாணவர்களுக்கு ஒரு புதிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையில் மாணவரின் சாதி சான்றிதழ் விபரம், முகவரி, ரத்த வகை, அடையாள எண்கள், தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து முக்கிய விபரங்களும் ஒருங்கிணைந்து இணைக்கப்படும்.

முதற்கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அவரின் இந்தக் கருத்துக்குப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: மாணவர்களின் அடிப்படை தகவல்கள் அடங்கிய ஒரு கார்டு வழங்கப் போகிறீர்களா? அப்படியென்றால் அதில் சாதி குறித்த தகவல்களும் இருக்குமென்றால் அது தேவையில்லாதது! மாணவர்களின் இரத்த வகை, ஆதார் எண் போன்றவற்றை மட்டும் அறிய வேண்டிய இடத்தில், சாதி குறித்த அடையாளமும் தேவைதானா? இடஒதுக்கீடு மற்றும் அரசின் சமூகநீதி பயன்களை பெற வேண்டிய இடத்தில் மட்டும் சாதிச் சான்றிதழ் விவரங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம்.

அமைச்சர் இதுகுறித்து விரிவான பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். அதேபோல், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அமைச்சரின் இந்தப் பேச்சின் உண்மையான நோக்கம் என்ன? இது அரசின் நிலைப்பாடா? மாணவர்களிடையே சாதி அடையாளத்தை ஊக்குவிக்கும் வகையிலான இந்தக் கருத்துக் குறித்து, தமிழ்நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு அமைச்சர் அவர்கள் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: