வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 164 பேர் உயிரிழப்பு: பீதியில் மக்கள்!

 

வெனிசுலா: வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 164 பேர் உயிரிழந்துள்ளனர். 971 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு முதற்கட்டத் தகவல் தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. வெனிசுலாவில் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாவது நிலநடுக்கம் 7.2 ரிக்டரிலும், அடுத்த நிலநடுக்கம் 7.5 ரிக்டரிலும் பதிவு பதிவாகியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. எங்கும் மரண ஓலமாக கேட்கிறது. தென் அமெரிக்க கண்டத்தின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு அழகான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நாடு வெனிசுலா.

இந்நிலையில் இங்கு, வரலாற்றில் இல்லாத அளவிற்கு அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளன. இது அந்நாட்டை உலுக்கி போடுவதாக இருக்கிறது. முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 என்ற அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கமானது, கரீபியன் கடற்கரையில் அமைந்துள்ள மோரோன் என்ற பகுதிக்கு மேற்கே, தலைநகர் கராகஸிலிருந்து சுமார் 168 கிமீ தொலைவில், நடுக்கடலுக்கு அடியில் 13 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த ஒரு நிமிடத்திற்குள், அதைவிட மிக சக்திவாய்ந்த 7.5 ரிக்டர் அளவிலான 2வது நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில், மோரோன் பகுதிக்கு தென்மேற்கே 16 கிமீ தொலைவை மையமாக கொண்டிருந்தது. அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கங்களை தொடர்ந்து, கரீபியன் தீவுகளில் ஒன்றான விர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டொமினிகன் குடியரசு அதிகாரிகளும், தங்கள் தீவு பகுதிக்கு சுனாமி ஆபத்து இருப்பதாக எச்சரித்தனர். இருப்பினும் சிறிது நேரத்திற்கு பிறகு புவேர்ட்டோ ரிகோ பகுதிக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கராகஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் கடுமையாக ஆட்டம் கண்டன.

இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், தங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெனிசுலாவின் மிக முக்கியமான சைமன் பொலிவார் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து, அந்த பகுதி முழுவதும் அடர்ந்த புகையால் சூழ்ந்தது. அங்கிருந்த பயணிகள் பீதியில் அலறியடித்து கொண்டு ஓடும் காட்சிகள் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், சிலர் அங்கிருந்த மேஜைகளுக்கு அடியில் தஞ்சம் புகுந்து உயிர் பிழைக்கும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுபற்றி, வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், நாட்டில் அவசரநிலையை அறிவித்துள்ளார். மேலும், கடுமையான சேதங்களை சந்தித்துள்ள நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக மூடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத் தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து வெனிசுலா நாட்டின் உள்துறை அமைச்சர் தியோஸ்டாடோ காபெல்லோ கூறுகையில், “இந்த நிலநடுக்கம் நாட்டின் பல மாநிலங்களில் உணரப்பட்டது.

குறிப்பாக கராகஸில் உள்ள அல்டமிரா பகுதியில் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து ஆபத்தான சூழல் நிலவுகிறது. இடிபாடுகளில் சிக்கி காமயடைந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் வேகமாக நடந்து வருகிறது. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. அடுத்தடுத்த அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் வீடுகளுக்கு வெளியே பாதுகாப்பாக இருக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்களை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்” என்றார்.

இந்த நிலநடுக்கம் பற்றி ட்ரூத் சோஷியல் தளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவில், வெனிசுலாவின் மக்களை தாக்கிய 2 நிலநடுக்கம் மிகப்பெரியவை. அவர்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது. புதிய மற்றும் சிறந்த நண்பர்களுக்காக நாங்கள் அங்கே இருப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பனாமா ஜனாதிபதியும், வெனிசுலாவுக்கு ஆழ்ந்த ஆதரவையும் ஒற்றுமையையும் தெரிவித்ததோடு, மனிதாபிமான உதவிகளை அனுப்பவும்
முன்வந்தார்.

ஜப்பானிலும் நிலநடுக்கம்; வெனிசுலாவை தொடர்ந்து ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. இதனால் பெரியதாக சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இவாத்தேவின் வடக்கு பகுதிக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், இதன் மையப்புள்ளியின் ஆழம் 50 கிலோமீட்டராக இருந்தது என்றும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா உதவ தயார்; பிரதமர் மோடி; வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கு பிரதமர் மோடி தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். அவர், தனது எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘வெனிசுலா அரசாங்கத்திற்கும், அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தி, இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்றும் உறுதிப்படுத்தினார்.

 

Related Stories: