தவெகவுக்கு தாவ பண்ருட்டி எம்எல்ஏ மோகன் முடிவு?.. பேரவையில் ஜெ.படத்தை பார்த்து அழுதவர்

 

பண்ருட்டி: கடலூர் வடக்கு மாவட்ட அதிமுகவில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் தவெகவுக்கு தாவ பண்ருட்டி எம்எல்ஏ மோகன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. கடலூர் வடக்கு மாவட்ட அதிமுகவில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியும் அடங்கும். நீண்ட காலமாக இந்த மாவட்டத்தின் செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பணியாற்றினார். அப்போது, பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மற்றும் எம்.சி.சம்பத்துக்கு ஏழாம் பொருத்தமாக இருந்தது. சட்டமன்றத் தேர்தலில் கடலூரில் போட்டியிட்ட எம்.சி.சம்பத் தோல்வியுற்றாலும், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தவெகவுடன் எம்.சி.சம்பத் தொடர்பில் இருந்ததால் அவரிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவியை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பறித்தார்.

அவருக்கு பதிலாக சம்பத்தின் அண்ணன் எம்.சி. தாமோதரனை மாவட்ட செயலாளராக நியமித்தார். இதனால் எம்.சி.சம்பத் தவெகவில் இணைந்தார். இனிமேல் கட்சியில் எந்த ஒரு கோஷ்டி பூசல் இருக்காது என தொண்டர்கள் நம்பினர். இந்நிலையில் கடலூரில் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் எம்.சி.தாமோதரன் தலைமையில் நடந்தது. இதில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மோகன் கலந்து கொள்ளவில்லை. எம்.சி.தாமோதரன் நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை. அவருக்கு அழைப்பு இல்லாததாலே கலந்து கொள்ளவில்லை என அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறினர்.

ஆனால் மாவட்ட தலைமையிடம் விசாரித்தபோது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த பண்ருட்டி எம்எல்ஏ மோகனை பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற தகவல் வெளியானது. எனவே எம்எல்ஏ பதவியை மோகன் விரைவில் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகின்றது. புதிய எம்எல்ஏவான மோகன், தமிழக சட்டசபையில் எம்எல்ஏவாக பதவியேற்றபோது அங்கிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை பார்த்து கண்ணீர் வடித்ததும் அவருக்கு முதல்வர் விஜய் ஆறுதல் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: