சித்திரக்குடியிலிருந்து ஆலக்குடி செல்லும் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த பள்ளத்தை பொதுமக்களே சீரமைப்பு

*அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு

வல்லம் : தஞ்சை மாவட்டம் சித்திரக்குடியிலிருந்து ஆலக்குடி செல்லும் பாதையில் சாலையோரத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

ஆனால் அதிகாரிகள் கண்டுக்கொள்ளததால் மக்களே சீரமைத்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி வழியாக புது கல்விராயன்பேட்டை, பழைய கல்விராயன்பேட்டை, ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை, தஞ்சாவூர் பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும் பால்வேன், காஸ் சிலிண்டர் ஏற்றிய வேன், லாரி உட்பட சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களும் தினமும் நூற்றுக்கணக்கில் சென்று வருகின்றன. இந்த சாலை வழியாக ஆலக்குடி, வல்லம், மருத்துவக்கல்லூரி, தஞ்சை பழைய பேருந்து நிலையத்திற்கு பஸ்சும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சித்திரக்குடி மாரியம்மன் கோயில் திரும்பும் பகுதியும், ஆலக்குடி செல்லும் சாலையிலும் பள்ளங்கள் அதிகமாக உள்ளது. முக்கியமாக ஆலக்குடி செல்லும் பாதையில் சாலையோரத்தில் சிறிய அளவில் இருந்த பள்ளம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த மழையில் பெரிய பள்ளமாக மாறி இருந்தது.

இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் தடுமாறியபடியே சென்று வந்தன. மேலும் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வந்தனர். இந்த பள்ளம் சாலையின் பாதியளவிற்கு மேல் நீண்டுக் கொண்டே வந்தது.

எனவே இந்த பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பல நாட்களாக பள்ளம் சீரமைக்காததால் வெறுப்படைந்த மக்கள் கட்டிட இடிபாடுகளை கொண்டு வந்து கொட்டி அந்த பள்ளத்தை சீரமைத்துள்ளனர். மக்களின் கோரிக்கைகள் அதிகாரிகளின் காதுகளில் எட்டியும் தீர்வு அளிக்க முடியாத நிலையில் உள்ளார்களா என்பதே இப்போதைய கேள்விக்குறியாகும்.

Related Stories: