திருப்பூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் வேலை புறக்கணிப்பு- சாலை மறியல்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு பகுதியான 15 வேலம்பாளையத்தில் 5 தளங்களுடன் 100 படுக்கை வசதி கொண்ட அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 17 தூய்மை பணியாளர்கள், 6 காவலாளிகள், 4 துணை செவிலியர்கள், 2 சூபர்வைசர், 1 மேலாளர் என 30 பேர் பணிபுரிந்து வருகின்றனர் . இவர்களுக்கு தனியார் நிறுவனம் மாதம் 12 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கி வருகிறது.

தற்போது உள்ள விலைவாசி உயர்வுக்கு இந்த ஊதியம் போதாது எனவும், 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இது குறித்து ஒப்பந்த நிறுவனம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனை கண்டித்து ஒப்பந்த பணியாளர்கள் 30 பேர் நேற்று தாங்கள் பணிகளை புறக்கணித்து மருத்துவமனைக்கு வெளியே 15 வேலம்பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த 15 வேலம்பாளையம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதில், உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த பணியாளர்களின் இந்த போராட்டத்தால் நேற்று அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணிகள் மற்றும் மருத்துவப்பணிகள் பாதிப்புக்குள்ளானது.

மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு ஒப்பந்த நிறுவனத்திற்கு ஊதிய உயர்வு குறித்தான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Related Stories: