*துர்நாற்றம், தொற்றுநோய் பாதிப்பால் பொதுமக்கள் அவதி
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளிலும், பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய இடங்களிலும் குப்பைகள் மொத்தமாக குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, திருப்பூர் கல்லூரி சாலை டெலிபோன் குவார்ட்டர்ஸ் வீதியில் பல நாட்களாகக் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளால் அந்த பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவது மட்டுமின்றி, தற்போது வீசும் காற்றின் வேகத்தின் காரணமாக அந்த குப்பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்குள் செல்வதாக அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, கல்லூரி சாலையில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டதை உடனடியாக அப்புறப்படுத்தவில்லையெனில், பொதுமக்களைத் திரட்டிப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகராட்சிக்கு எச்சரிக்கை விடுத்து அந்த பகுதியில் விளம்பர தட்டிகளை வைத்துள்ளனர்.
இதேபோல், திருப்பூர் மாநகராட்சி பெருமாள் கோயில் அருகே உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட் பின்புறம், பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு, அந்த வீதி முழுவதும் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பூ மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும், பூக்கள் வாங்க வந்து செல்லும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு அருகாமையிலும் வீட்டு கழிவுகள் மற்றும் மார்க்கெட் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சூரியன் நகர், ஏடிபி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நொய்யல் ஆற்றில் குப்பைகள் போடுவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பச்சை தடுப்பு திரைகள் கிழிக்கப்பட்டு, நொய்யல் ஆற்றின் கரையோரங்களில் குப்பைகளும், பின்னலாடை நிறுவனக் கழிவுகளும் தடையின்றி கொட்டப்பட்டு வருகின்றன.
குப்பை பிரச்னை ஒருபுறமிருக்க, மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் நீண்ட நாட்களாகச் சரி செய்யப்படாததால், கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட செரங்காடு பகுதியில் சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, கழிவுநீர் முழுவதும் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியே பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும், பின்னலாடை நிறுவனங்களுக்குச் செல்லும் தொழிலாளர்களும், பொதுமக்களும் பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளனர்.
வாகனங்களில் செல்வோர் மட்டுமன்றி, நடந்து செல்லும் பாதசாரிகளும் இந்த சாக்கடைக் கழிவுநீரைக் கடந்து, துர்நாற்றத்துடனேயே நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதன் காரணமாக அவர்களுக்குத் தோல் தொடர்பான தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மக்களுக்கு எந்தவிதப் பிரச்னைகளும் இல்லாத வகையில் கண்காணிக்கவும் வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதுமட்டுமன்றி, வாரம் தோறும் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், இந்த பிரச்னைகளுக்கு இதுவரை எந்தவொரு நிரந்தரத் தீர்வும் காணப்படவில்லை. இதனால் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டு திருப்பூர் மாநகரப் பொதுமக்கள் பெரும் ஏமாற்றமும், கடும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
கடந்த ஆட்சிக் காலத்தின்போது திருப்பூர் மாநகரில் நிலவும் குப்பை பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நெருப்பெரிச்சல் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பூங்கா அமைக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நுண் உரமாக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு, குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டது. அவை முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
டாலர் சிட்டி வர்த்தகம் பாதிக்கும் அபாயம்
சர்வதேச நாடுகளுக்குப் பின்னலாடைகளை ஏற்றுமதி செய்யக்கூடிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகத் திருப்பூர் உள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வர்த்தகர்கள் திருப்பூர் வந்து, இங்குள்ள நிறுவனங்களை நேரடியாக ஆய்வு செய்து புதிய ஆர்டர்களை வழங்குவது வழக்கம்.
இத்தகைய சூழலில், மாநகராட்சியின் அலட்சியப் போக்கு காரணமாகத் திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கியும், கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்தும் ஓடும் அவலக் காட்சியை வெளிநாட்டு வர்த்தகர்கள் காணும்போது திருப்பூர் மீதான உலகளாவிய மதிப்பு கேள்விக்குறியாகும். இது புதிய ஆர்டர்கள் கிடைப்பதை பாதிப்புக்குள்ளாக்கும்.
எனவே, பொதுமக்களுக்கான சுகாதாரத்தை வலுப்படுத்துவதோடு, டாலர் சிட்டி என அழைக்கப்படும் தொழில் நகரான திருப்பூரின் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு மாநகராட்சிக்கு உள்ளது எனத் தொழிற்துறையினர் வலியுறுத்துகின்றனர்.
