குளத்தூர், ஜூன் 25: குளத்தூர் – சிப்பிகுளம் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து குளத்தூர் மயானப்பகுதி, அண்ணா நகர் காலனி வழியாக சிப்பிகுளம் செல்லும் சாலை உள்ளது. குளத்தூர் மேற்கு பகுதியில் இருந்து வேதக்கோயில் தெரு, கக்கன்ஜி நகர், பெரியார்நகர், அண்ணாநகர், வண்ணாரப்பேட்டை, காமராஜர் நகர் பகுதிகளில் இருந்து தினசரி வெளியேற்றப்படும் குடியிருப்பு கழிவுகளை குளத்தூர் ஊராட்சி தூய்மை பணியாளர்களால் சேகரித்து வாகனங்களில் கொண்டு வந்து குளத்தூர்- சிப்பிகுளம் செல்லும் சாலை மற்றும் மயானப் பகுதி முழுவதும் கொட்டிச் செல்கின்றனர். இதனால் இச்சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள், குப்பை கழிவுகளில் சிக்கி தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
