ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 25: ஆர்.எஸ்.மங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பலர், தங்கள் வீடுகளில் சேரும் காய்கறி கழிவுகள் மற்றும் மீதமான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி தெருக்களிலும் பொது இடங்களிலும் வீசி விடுகின்றனர். பசியோடு வரும் மாடுகள் மற்றும் ஆடுகள், அந்த பைகளுக்குள் இருக்கும் உணவை உண்பதற்காக பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்தே உட்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இவ்வாறு உட்கொள்ளப்படும் பிளாஸ்டிக் பைகள் கால்நடைகளின் வயிற்றுக்குள் சென்று செரிமானம் ஆகாமல் தங்கி விடுவதால், அவை கடும் உடல்நலக் கோளாறுகளுக்கு உள்ளாவதுடன் உயிரிழக்கும் அபாயமும் நிலவுகிறது.
இது குறித்து இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆங்காங்கே கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பொதுமக்கள் காய்கறி கழிவுகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வீசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என முறையாகத் தரம் பிரித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
