×

அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் பெண் குழந்தைகளை காப்போம் கலெக்டர் உறுதிமொழி

 

அரியலூர், ஜூன் 23: அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என கலெக்டர் தலைமையில் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அரியலூர் மாவட்டம் நகராட்சி பேருந்து நிலையத்தில், சமூக நலன், மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!! குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழியை கலெக்டர் மிருணாளினி, வாசிக்க அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். அதன்பிறகு குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழியான “குழந்தை திருமணம் என்பது சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் ஒரு தீய செயலாகும்.

என் குடும்பம், சுற்றுப்புறம் மற்றும் சமூகத்தில் குழந்தை திருமணம் நடைபெறாதபடி உறுதி செய்வேன். குழந்தை திருமணம் இல்லாத அரியலூர் மாவட்டத்தை உருவாக்கும் முயற்சிக்கு நான் உறு துணையாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன்” கலெக்டர் வாசிக்க அரசு அலுவலர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் சார்பில் பெண்கள், குழந்தைகளுக்கான பிரச்னைகள் உதவி மைய எண்களான குழந்தைகள் பிரச்னைகள் 1098, பெண்கள் பிரச்னைகள்-181, பெண்களுக்கான ஆலோசனை-104, சைபர் கிரைம் 1930, முதியோர்களுக்கான பிரச்சனை 14567 உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கி கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர், அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தின் மேற்கூரைகளில் மேற்கொள்ளப்படும் விரிவாக்க இணைப்பு சீரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் கலெக்டர் மிருணாளினி, ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் விக்னேஸ்வரி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், அரியலூர் ஆர்டிஓ பிரேமி, அரியலூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Ariyalur Municipal Bus Stand ,Ariyalur ,Ariyalur District Municipal Bus Stand ,Social Welfare and Women's Rights Department… ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...