போடி, ஜூன் 15: தரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு உணவகங்கள் செயல்படுகிறது. இங்கு அன்றாடம் சமைக்கப்படும் உணவுகளை மட்டுமே தங்களது கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டும். சமையல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படாத உணவுகள் இருப்பு வைக்க கூடாது. சமைத்த உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது. குறிப்பாக மட்டன், சிக்கன் மற்றும் மீன் தொடர்பான இறைச்சிகள் வாங்கும் போது கடைகளில் பில் பெற்று வைத்திருக்க வேண்டும்.
அன்றாடம் தேவைப்படக்கூடிய அளவிலான மட்டன் மற்றும் சிக்கன் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். நிறமிகள் பயன்படுத்தி உணவு பொருட்கள் தயாரிக்க கூடாது. இறைச்சி வகைகள் சமைத்த 4 முதல் 5 மணி நேரத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டும். உணவக உரிமையாளர்கள் அரசால் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ் கட்டாயம் பெற்று இருக்க வேண்டும். பணியாளர்களின் தன் சுத்தம் பராமரிக்க வேண்டும். பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் உணவு சமைக்க பயன்படுத்தகூடாது உள்ளிட்ட விதிகள் இருந்தும், ஒரு சில உணவகங்கள் விதிகள் மீறி செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
