×

‘அண்ணா திராவிடர் கழகம்’புதிய கட்சி தொடங்கினார் திவாகரன்

மன்னார்குடி : ‘அண்ணா திராவிடர் கழகம்’ என்ற பெயரில் திவாகரன் புதிய கட்சியை நேற்று தொடங்கினார். அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும் என்று அப்போது தெரிவித்தார். அ.ம.மு.க.வின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. அதன்காரணமாக அம்மா அணி என்கிற பெயரில் தனி அமைப்பை திவாகரன் உருவாக்கினார். இதற்கு, சசிகலா தனது வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் மூலம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், கோபமடைந்த திவாகரன், அவர் தனது சகோதரி இல்லை என்று அறிவித்தார். பின்னர், தனது ஆதவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்தநிலையில், அம்மா அணி என்கிற அமைப்பை அரசியல் கட்சியாக நேற்று மாற்றினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், ‘அண்ணா திராவிடர் கழகம்’ என்று பெயரிட்டு, புதிய கொடியையும் அறிமுகம் செய்தார்.

அத்துடன் மன்னார்குடி கட்சி அலுவலகத்தில் புதிய கொடியை ஏற்றி வைத்தார். இதுகுறித்து திவாகரன், நிருபர்களிடம் விளக்கியதாவது: எடப்பாடி பழனிசாமி அணியில் நான் சேர்ந்து விடுவேன் என்று வதந்தி பரப்பினார்கள். ஆனால் நான் புதிய கட்சி தொடங்கி உள்ளேன். இதில் நான் பொது செயலாளராக உள்ளேன். எனது கட்சி கொடியில் உள்ள நட்சத்திரத்தின் 4 முனைகள் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரையும், மற்றொரு முனை பெயர் சூட்டப்படாத முனையமாகவும் இருக்கும். கட்சி வேறு, உறவு வேறு என்று தினகரன் கூறுவது ஏமாற்று வேலை. உறவு இல்லை என்றால் இவர் பதவிக்கு வந்திருக்க முடியாது. நான் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அரசியலில் இருக்கிறேன். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதா, ஜானகி ஆகியோரை தலைமையில் அதிமுக பிளவுபட்டது. அப்போது ஜெயலிலதா தலைமையில் 90 சதவீத அதிமுகவினரை கொண்டு வந்தது நான்தான்.

கமலுக்கு காவிரி என்றால் என்னவென்று தெரியாது. அதனால்தான் 50 ஆண்டு காவிரி போராட்டத்தை அவர் மீண்டும் பின்னுக்கு தள்ளுகிறார். தங்களின் படங்களின் வியாபாரத்திற்காகவே ரஜினியும், கமலும் அரசியல் நடத்துகின்றனர். ரஜினி கர்நாடக மக்களின் பிரதிநிதியாகவே உள்ளார். நீட் தேர்வை தமிழக அரசு நேரடியாக எதிர்த்தால் மட்டுமே நல்ல தீர்வு கிடைக்கும். தமிழகத்திற்கு நீட் தேர்வு அவசியமில்லை. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் சேர்த்து நடத்தப்படும் என்று கருதுகிறேன். எங்கள் கட்சி இப்போதுதான் பிறந்துள்ளது. மக்களின் ஆசியோடு தேர்தல்களில் போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மகனுக்கு மாநில பொறுப்பு
அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை திவாகரன் வெளியிட்டார். இதன்படி, கட்சியின் பொது செயலாளர் திவாகரன், அவைத்தலைவர் கும்பகோணம் சுந்தர்ராஜன், பொருளாளர் சென்னையை சேர்ந்த சுப்பிரமணியன், அமைப்பு செயலாளர் முன்னாள் எம்.பி.யான மதுரை ராஜேஸ்வரன், மகளிரணி அமைப்பாளர் திருச்சி உமா, மாநில மாணவரணி மற்றும் இளைஞரணி அமைப்பாளர் ஜெயானந்த் திவாகரன். இவர்களுடன் 47 மாவட்ட அமைப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…