சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களிடம், கூறியதாவது: தவெக தலைவர் விஜய் தனித்து நிற்கிறேன் என கூறவில்லை. அனைவருக்கும் ஆட்சியில் பங்கு தருகிறேன் என அழைத்தார். வரவில்லை என்பதால் தனித்து விடப்பட்டார். என்னை பல்வேறு கட்சியில் இருந்து கூட்டணிக்கு அழைத்தார்கள். நான் செல்லவில்லை. பல கோடி தருகிறேன். பல பதவிகள் தருவதாக கூறினர். நான் செல்லவில்லை.
தவெக வரும்போதே ஆட்சியில் பங்கு என்றுதான் வந்தார்கள். நீண்ட நாள் காங்கிரஸ் கட்சியை எதிர்பார்த்து இருந்தார்கள். பல கட்சிகள் கூட்டணிக்கு வருமென எதிர்பார்த்து இருந்தார்கள். யாரும் வரவில்லை. தவெகவை எங்களுடன் சேர்த்து ஒப்பிடுவது தவறு. விஜய்க்கு ஒன்றிய அரசு நெருக்கடி தருவதாக கூறுகிறீர்கள். எனக்கு கொடுக்காத நெருக்கடிகளா? என் மீது 260 வழக்குகள் உள்ளன. நான் ஏறாத நீதிமன்ற படிக்கட்டுகளே கிடையாது. போகாத சிறை கிடையாது.
அரசியல் கட்சிகளில் என் மீதும், என் கட்சியினர் மீதும்தான் என்ஐஏ ஏவப்பட்டுள்ளது. திடீர் என எங்கள் கட்சி சின்னத்தை முடக்கி மிரட்டுவார்கள். நெருக்கடி என்பது நீங்கள் எடுத்துக்கொள்ளும் முடிவு தான். ஒரு நேர்மையாளனுக்கு மட்டும் தான் திமிரும், துணிவும் வரும். நேர்மையாக இருந்தால் எதற்கும் பயப்பட தேவையில்லை. என்ன வேண்டுமானாலும் பார்க்கலாம். சிறையில் போடுவார்கள். பயப்படாமல் இருக்க வேண்டும். மிரட்டல், உருட்டலுக்கு பயந்தால் இந்த அரசியல் வேலைக்கு வரக்கூடாது.
சாட்டை துரைமுருகனை தவெக விமர்சனம் செய்வது குறித்து கேட்கிறீர்கள். தவெக கட்சியில் இருந்து எங்கள் கட்சியினரை, எங்கள் தொண்டர்களை விமர்சனம் செய்கிறார்கள். நீங்கள் கண்ணியமாக பேசினால் நாங்கள் கண்ணியமாக பேசுவோம். நீங்கள் வாங்க என்று சொன்னால், நாங்களும் வாங்க என கூறுவோம். நீங்கள் வாடா என கூறினால், நாங்களும் அப்படித்தான் கேட்போம்.
நீங்கள் வெட்ட ஓங்கும்போது விழுந்து கும்பிடும் கோழை இல்லை நாங்கள். நீங்கள் வெட்ட வேண்டும் என நினைக்கும்போதே வெட்டி முடிக்கின்ற வீர பரம்பரை. நீங்கள் தேவையில்லாத சேட்டை செய்யக்கூடாது. எவ்வளவு இழிவாக எங்கள் கட்சி நிர்வாகிகள், மகளிரைப் பற்றி எழுதினால் பிறகு என்ன செய்வது? நாங்கள் கண்ணியமாக பேசுகிறோம், நீங்களும் கண்ணியமாக பேசுங்கள். இவ்வாறு கூறினார்.
