நொய்டா: உத்தரபிரதேசத்தில் கணவரை பிரிந்து வேறொருவருடன் வாழ்ந்து வந்த இளம்பெண்ணை இரண்டு பேர் கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் சப்ராவுலா கிராமத்தை சேர்ந்த சோனி (30) என்ற பெண், தனது கணவரை பிரிந்து மவுசம் என்ற நபருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டிற்கு பைக்கில் வந்த இருவர், வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர். வீட்டிற்குள் தனியாக இருந்த சோனியை நோக்கி சரமாரியாக சுட்டனர். பின்னர் இருவரும் தப்பிவிட்டனர், தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த சோனியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மத்திய நொய்டா போலீஸ் டிசிபி சுனிதி கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணையில் பீகாரை சேர்ந்த சோனிக்கும், அவரது கணவருக்கும் குடும்பத் தகராறு இருந்துள்ளது. அதனால் அவர் பிரிஜ் விஹார் காலனியில் உள்ள மவுசம் என்ற நபருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டிற்கு வந்த இருவர், சோனியுடன் பேசிக் கொண்டே அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி விட்டனர். சோனியின் கணவரின் ஆட்களா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.
The post கணவரை பிரிந்து வேறொருவருடன் வாழ்ந்த இளம்பெண் சுட்டுக் கொலை: பைக்கில் வந்த கொலையாளிகள் ஓட்டம் appeared first on Dinakaran.