*சுற்றுலா பயணிகள் குதூகலம்
ஏற்காடு : பக்ரீத் விடுமுறையையொட்டி, நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நாள் முழுவதுமாக சாரல் மழையும், கடும் பனி மூட்டம் நிலவியதால் மகிழ்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சமீப காலமாக கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. வார விடுமுறை, பண்டிகை நாட்களில் ஏற்காட்டுக்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குடும்பத்துடன் காட்டேஜ், ஓட்டல், விடுதிகளில் தங்கி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, மான் பூங்கா உள்ளிட்டவற்றை சுற்றிப்பார்த்து செல்கின்றனர். மேலும், ஏற்காடு படகு இல்லம், சேர்வராயன் கோயில், பக்கோடா பாயிண்ட், லேடிஸ்சீட், காட்சி முனையம் போன்ற இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
பக்ரீத் பண்டிகை விடுமுறையையொட்டி, நேற்று ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால், கடைகளில் வியாபாரம் களை கட்டியது. சாலையோர கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்தது. அதே சமயம் ஏற்காட்டில் நேற்று காலை முதலே கடும் பனி மூட்டம் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இதனால், மலைப்பாதையில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது.
கொண்டை ஊசி வளைவுகளில் பனி மூட்டமும் சூழ்ந்தது. நண்பகல் வேளையில் படகு இல்லம் மற்றும் ஏரி பகுதி, ஒண்டிக்கடை ரவுண்டானா ஆகிய பகுதிகளில் சாலை தெரியாத அளவிற்கு பனிமூட்டம் படர்ந்தது. இதனால் அவ்வழியே சென்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. ஏற்காட்டில் நிலவிய இதமான சீதோஷண நிலையால் சுற்றுலா வந்த பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.இதேபோல், அருகில் உள்ள வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
The post ஏற்காட்டில் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டம் appeared first on Dinakaran.