×

மாநிலத்தில் குறைந்த அளவே வரி வசூல்; மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வசூலை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தல்

மா நிலத்தில், குறைந்த அளவே வரி வசூல் செய்யப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இனி, அதிக கவனம் செலுத்தி வரி வசூல் செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர் போன்ற பெரிய மாநகராட்சிகள் உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் 490 பேரூராட்சிகள் உள்ளன. இதில் மாநகராட்சி, நகராட்சிகளில் சொத்துவரி, தொழில் வரி மற்றும் குடிநீர் வரி வசூல் செய்யப்படுகிறது. அரசுக்கு முக்கியமான வருவாய் என்பது வரிகள் மூலம் தான் கிடைக்கிறது. அதன் மூலமே மக்கள் நலதிட்டங்களை அரசு மேற்கொள்கிறது.

அந்த வரிகளே மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் வரும் வருவாய் மூலம்தான் தான் அரசு, மக்களுக்கான நலதிட்ட பணிகளை செய்து வருகிறது. அதேபோல், சாலைகள், கல்வி, போக்குவரத்து, அவசர தேவைக்கான நிதி, பூங்காக்கள், பொழுதுபோக்கு மற்றும் நூலகங்கள் போன்ற சேவைகளுக்கு இந்த வரியில் இருந்து பெறப்படும் நிதி பயன்படுகிறது. இதனிடையே, பொதுமக்கள் வரியை எளிதாக செலுத்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், சொத்து வரி நிர்வாகம் மற்றும் பிற குடிமை அம்சங்களில் புதிய சட்டத்தின் தாக்கம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

வரி வசூலிப்பவர்கள், சொத்து வரி வசூலிக்க வீடுகளுக்குச் நேரடியாக சென்று மதிப்பீட்டாளர்களுக்கு ஊக்கத்தொகையுடன் வரி செலுத்த உதவும் வகையில் பொதுமக்களை விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். மேலும் வரி செலுத்துபவர்களுக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில், வரியை தங்கள் இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி வசூல் மையங்கள் ஆகியவற்றில் செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, பொதுமக்கள் வரிகளை செலுத்த ஊக்கப்படுத்தும் வகையில், குறிப்பிட்ட காலத்திற்குள் வரியை செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை அதிகபட்சமாக ரூ5,000 வரை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் 2023-24ம் ஆண்டின் ஜூலை 27ம் தேதி வரையிலான வரி வசூல் குறித்த புள்ளி விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் சென்னை பெருநகர மாநகராட்சிக்கு வரவேண்டிய சொத்து வரி ரூ1,440 கோடி. ஆனால், ஆகஸ்ட் காலகட்டம் வரை ரூ588 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. அதேபோல் தொழில் வரியில் ரூ401 கோடிக்கு பதிலாக ரூ36 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு குடிநீர் கட்டணம் ரூ691.31 கோடி சென்னை பெருநகராட்சிக்கு வருவதற்கு பதிலாக ரூ350.42 கோடி மட்டுமே மக்கள் குடிநீர் வரியை செலுத்தி உள்ளனர். அதேபோல் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளை பொறுத்தவரை சொத்து வரியானது ரூ1925 கோடியில், 493 கோடி மட்டுமே வசூலாகி உள்ளது.

தொழில் வரியில் ரூ223 கோடியில் ரூ39 கோடியும், குடிநீர் வரியில் ரூ417 கோடி கேட்கப்பட்டு ரூ66 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. நகராட்சியை பொறுத்தவரை சொத்து வரியில் ரூ774 கோடி கேட்கப்பட்டு ரூ170 கோடியும், தொழில் வரியில் ரூ77 கோடி கேட்கப்பட்டு ரூ9 கோடியும், குடிநீர் வரியில் ரூ248 கோடி கேட்கப்பட்டு ரூ25 கோடி கடந்த 6 மாதங்களில் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாக அதிகாரிகள் கூறுகையில் : வரி வசூலிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரி செலுத்துவதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது வரை தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மக்கள் செலுத்தும் வரி வசூல் குறைவாக உள்ளது. அதை வசூலிக்கும் நடவடிக்கை தீவிரமாகி உள்ளது.

வரி வசூல் தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் முழுமையாக வரி வசூல் செய்யமுடியும். எனவே, அரசு எடுக்ககூடிய நடவடிக்கைகளுக்கு முன்பாகவே பொதுமக்கள் தாமாக முன்வந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு தாங்கள் செலுத்தவேண்டிய வரிகளையும், பாக்கி வைத்துள்ள வரிகளையும் உடனடியாக செலுத்த வேண்டும். அப்போதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்திற்கும் தேவையான நிதிகளை உடனடியாக ஒதுக்கீடு செய்ய முடியும். மேலும் குறைந்த சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அதிக கவனம் செலுத்தி வரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மாநிலத்தில் குறைந்த அளவே வரி வசூல்; மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வசூலை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED முன்னாள் முதல்வர் கலைஞரின் 6வது ஆண்டு...