×

மீனவரின் உடலை மீட்க, காயமடைந்தவர்களை தமிழகத்திற்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்


சென்னை: இலங்கை கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த மீனவரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இதுபோன்ற நிகழ்வுகளில் இந்திய மீனவர்கள் உயிரிழப்பது இதயத்தை நொறுக்குவதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. இந்த விவகாரத்தை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு உடனே எடுத்துச் செல்ல வேண்டும். உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதோடு, இரண்டு மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த இரண்டு மீனவர்களும் இலங்கை அதிகாரிகள் வசம் உள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்கிடவும், போதிய மருத்துவ வசதிகளையும் வழங்கிடவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். நமது பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி மேற்கொள்ளும் இதுபோன்ற அத்துமீறல்கள், மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம், தமிழ்நாட்டின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் உள்ளது.

இதனை கடந்த காலங்களில் பலமுறை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சக கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும், எனவே இந்த விஷயத்திற்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்து, தூதரக நடவடிக்கையின் மூலம் உரிய தீர்வு காணப்படும் என தான் நம்புவதாகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

The post மீனவரின் உடலை மீட்க, காயமடைந்தவர்களை தமிழகத்திற்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister of State for Foreign Affairs ,K. Stalin ,Chennai ,Chief Minister of State ,Jaisankar ,Union Minister of State for Foreign Affairs ,Sri Lankan Navy ,Mu. ,Union ,Dinakaran ,
× RELATED இலங்கை கடற்படையினரால்...