×

இந்தியாவில் எந்த கல்வி நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் தலைசிறந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: இந்தியாவில் எந்த வகையான கல்வி நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் தலைசிறந்த கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். சென்னை லயோலா கல்லூரியில் நேற்று நடந்த நூற்றாண்டு தொடக்க விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சென்னையில் எத்தனையோ கல்லூரிகள் இருந்தாலும் லயோலா மட்டும்தான் தனித்துத் தெரியும். கல்வி, விளையாட்டு, கலை என அனைத்திலும் லயோலா மாணவர்கள் தனித்துவமாக தெரிவார்கள். ஏராளமான சாதனையாளர்களை உருவாக்கி இருக்கக் கூடிய கல்லூரி. இங்கு நான் படிக்காமல் சென்று விட்டேனே என்ற வருத்தம் இருக்கிறது. ‘லயோலா’ என்று சொன்னாலே, அது ஒரு பெருமைதான், ஒரு கெத்து தான்.

என்னுடைய மகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், அவரது அண்ணன் சன்டிவி கலாநிதி மாறன் என எல்லோருமே இந்த கல்லூரியில்தான் படித்திருக்கிறார்கள். நான் மட்டும்தான் மிஸ் ஆகிவிட்டேன். அருட்தந்தை பிரான்சிஸ் பெட்ரம் எஸ்.ஜெ மற்றும் அவருடைய சக இயேசு சபை அருட்பணியாளர்கள் இந்த கல்லூரியை சேவை நோக்கோடு தொடங்கினார்கள். தலைவர் கலைஞர் பிறந்த 1924ம் ஆண்டில்தான் இந்த நிறுவனத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 1925ம் ஆண்டு தன்னுடைய கல்விப் பணியை இந்தக் கல்லூரி தொடங்கியுள்ளது. இன்னார் தான் படிக்கலாம் – இன்னார் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் தலை விரித்து ஆடிய காலத்தில் அனைவரும் படிக்கலாம் என்ற பெரிய வாசலை திறந்து விட்ட எத்தனையோ கல்லூரிகளில் லயோலா கல்லூரியும் மிகவும் முக்கியமான ஒன்று.

சமூகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்விக் கண்ணைத் திறந்து விட்ட இந்தக் கல்லூரி, நாட்டின் முதல் 10 சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் எந்த வகைப்பட்ட கல்வி நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் தலைச்சிறந்த கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கிறது. கல்விதான் ஒருவரின் அனைத்துத் தடைகளையும் தகர்த்து தலைநிமிரச் செய்யும் என்ற கல்வி புரட்சியை தொடங்கி வைத்த நீதிக்கட்சியும், அந்த நீதிக்கட்சி வழிவந்தவர்களும்தான் இதற்கு காரணம். அதனால்தான் கல்விக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கிறோம்.காமராஜரின் காலம் பள்ளிக் கல்வியின் பொற்காலமாக இருந்தது. கலைஞர் ஆட்சிக்காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலமாக இருந்தது.

இன்றைய திராவிட மாடல் ஆட்சியானது உயர் கல்வியின் பொற்காலமாக, ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக திகழ்ந்து வருகிறது. இத்தகைய வாய்ப்பை பெற்றுள்ள மாணவர்கள் இதை நல்லபடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் டாக்டர் எழிலன், இனிகோ இருதயராஜ், சிறுபான்மையின் நலவாரியத் தலைவர் ஜோ.அருண், பீட்டர் அல்போன்ஸ், சென்னை இயேசு சபை மாநில தலைவர் இருதயராஜ், லயோலா கலைமனைகள் அதிபர் அந்தோணி ராபின்சன், லயோலா கல்லூரி செயலர் ஜெயராஜ், கல்லூரியின் முதல்வர் லூயிஸ் ஆரோக்கியராஜ், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் முனைவர் விஸ்வநாதன், சேவியர் பிரிட்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post இந்தியாவில் எந்த கல்வி நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் தலைசிறந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,M. K. Stalin ,Chennai Loyola College ,
× RELATED இந்தியாவின் விளையாட்டு தலைநகரம்...