மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம் என்பது வதந்தி: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை


சென்னை: மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக பரவி வரும் தகவல் வெறும் வதந்தியே என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. வாட்ஸ் அப்பில் பரவி வரும் புகைப்படத்தை யாரும் நம்ப வேண்டாம். மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் ஏதும் நடைபெறவில்லை.

பெண்களின் சுயமரியாதை காக்கவும், அவர்களது உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாகவும் மாதம் தோறும் 1000 ரூபாயை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் புதிய திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற இத்திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது

முதற்கட்ட முகாம்கள் ஜுலை 24 தேதி முதல் ஆகஸ்ட் 04 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05 தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்கள் மற்றும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்நிலையில் இன்று மகளிர் உரிமை தொகை தொடர்பாக சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த தகவல் முற்றிலும் வதந்தி தான் என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற பொய்யான தகவல்களை வாட்ஸ் அப்பில் பரவி வரும் புகைப்படத்தை யாரும் நம்ப வேண்டாம். மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் ஏதும் நடைபெறவில்லை என்றும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கபடும் என்றும் எச்சரித்து உள்ளது.

 

 

 

 

 

 

 

The post மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம் என்பது வதந்தி: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: